ராய்ச்சந்திர பாய்

ராய்ச்சந்திர பாய்

பம்பாய் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது என்று முந்திய அத்தியாயத்தில் கூறினேன். ஜூன், ஜூலை மாதங்களில் அரபுக் கடலில் இவ்விதம் இருப்பது சகஜம். ஏடனிலிருந்து நெடுகவுமே அலை அதிகமாகவே இருந்தது. அநேகமாக எல்லாப் பிரயாணிகளுக்கும் மயக்கமும் வாந்தியுந்தான். நான் ஒருவனே எதுவும் இல்லாமல் சுகமாக இருந்தேன். கப்பலின் மேல் தளத்தில் இருந்து கொண்டு, காற்றின் ஆவேசத்தையும் அலைகள் வேகமாகக் கப்பலில் வந்து மோதுவதையும் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர இரண்டொருவரே காலை ஆகாரம் சாப்பிட வருவார்கள். ஓட்ஸ் கஞ்சித் தட்டை மிக எச்சரிக்கையுடன் மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடுவேன். கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் மடியிலெல்லாம் கஞ்சி கொட்டிவிடும்.
வெளிப்புயல், என் அகப்புயலுக்குப் ஒரு சின்னமாகவே இருந்தது. வெளிப்புயல் எவ்விதம் என்னைக் கலங்கச் செய்யவில்லையோ அதைப்போலவே அகப்புயலைக் குறித்தும் நான் கலங்கவில்லை என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன். சாதிக்கட்டுப்பாட்டுத் தொல்லை வேறு, என்னை எதிர்நோக்கி நின்றது. பாரிஸ்டர் தொழிலைத் தொடங்குவது சம்பந்தமாக எனக்கு இருந்து வந்த அதைரியங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். மேலும், நான் சீர்திருத்தக்காரன். எனவே சில சீர்திருத்தங்களை எவ்விதம் ஆரம்பிக்கலாம் என்பதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததையெல்லாம் விட இன்னும் அதிகக் கஷ்டங்கள் எனக்குக் காத்துக் கொண்டிருந்தன.
என் மூத்த சகோதரர் என்னைச் சந்திப்பதற்காகத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். அவர் , இதற்கு முன்பே டாக்டர் மேத்தாவுடனும் அவருடைய மூத்த சகோதரருடனும் பழக்கமாகிவிட்டார். தமது வீட்டிலேயே நான் தங்க வேண்டும் என்று டாக்டர் மேத்தா வற்புறத்தியதன் பேரில் நாங்கள் அங்கே சென்றோம். இவ்விதம் இங்கிலாந்தில் ஏற்பட்ட பழக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் இடையே நிரந்தரமான நட்பாக வளர்ந்து விட்டது.
என் தாயரைப் பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. என்னைத் திரும்ப வரவேற்று, மார்புடன் தழுவி மகிழ, அவர் தமது பூதவுடலுடன் அப்பொழுது இல்லை என்பது எனக்குத் தெரியாது. அவர் காலமாகிவிட்டார் என்ற துக்கச் செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தேன். நான் இங்கிலாந்தில் இருந்தபோதே, என் அன்னை இறந்துவிட்டார். இதை என் சகோதரர் எனக்கு தெரிவிக்கவில்லை. வெளிநாட்டில் இப்பெரும் துக்கத்தின் வேதனை எனக்கு ஏற்பட வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கிறார். என்றாலும் இப்பொழுது அச்செய்தி எனக்குக் கடுமையான அதிர்ச்சியையே உண்டாக்கியது. ஆனால், அதைக் குறித்து நான் அதிகமாக விவரித்துக் கொண்டு போகக் கூடாது. என் தந்தையார் இறந்தபோது எனக்கு இருந்த துக்கத்தைவிட இது இன்னும் அதிகத் துக்கம் என் உள்ளத்தில் ஆசையோடு வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் சிதறுண்டு போயின. ஆனால், அழுது புலம்பி என் துக்கத்தை நான் வெளிக்காட்டவில்லை என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கண்ணீர் பெருகுவதையும் என்னால் தடுத்துவிட முடிந்தது. எதுவுமே நிகழாதது போலவே என் காரியங்களைக் கவனித்து வந்தேன்.
டாக்டர் மேத்தா, பல நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் அவருடைய சகோதரரான ஸ்ரீ ரேவா சங்கர் ஜகஜPவனும் ஒருவர். அவருக்கும் எனக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்பு வளர்ந்தது. ஆனால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் ராய்ச்சந்திர் - ராஜ்சந்திரர் என்ற கவி முக்கியமானவர் என்பதை நான் குறிப்பிட வேண்டும். அவர் டாக்டர் மேத்தாவின் ஒரு மூத்த சகோதரரின் மாப்பிள்ளை ரேவாசங்கர் ஜகஜPவனி என்ற பெயரில் நடந்து வந்த நகை வியாபாரத்தில் அவர் ஒரு பங்குதாரர். அவருக்கு அப்பொழுது வயது இருப்பத்தைந்துக்கு மேல் இராது. ஆனால் அவரை முதன் முதல் பார்த்ததுமே அவர் சிறந்த ஒழுக்கமும் புலமையும் உள்ளவர் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் சதாவதானி என்றும் பெயர் பெற்றிருந்தார். ( ஏககாலத்தில் நூறு விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் அல்லது கவனிக்கும் பேராற்றல் படைத்தவர் ).
அவர் தமது அபாரமான ஞாபக சக்தியால் செய்யும் சில அருஞ்செயல்களைப் பார்க்கும்படியும் டாக்டர் மேத்தா என்னிடம் கூறினார். ஐரோப்பிய மொழிகளில் எனக்கு எத்தனை சொற்கள் தெரியுமோ அவ்வளவையும் சொல்லி அவற்றைத் திரும்ப ஒப்பிக்கும்படி அவரிடம் கேட்டேன். நான் அந்தச் சொற்களை எந்த வரிசைக் கிரமத்தில் சொன்னேனோ அந்த வரிசைக் கிரமம் ஒரு சிறிதும் தவறாமல் அவர் ஒப்பித்துவிட்டார். அவருடைய அபார சக்தியில் நான் மயங்கிப் போய்விடவில்லையாயினும். அந்த ஆற்றல் எனக்கு இல்லையே என்று பொறாமைப்பட்டேன். ஆனால் அவரைக் குறித்து எனக்குப் பின்னால் தெரியவந்த சில விஷயங்கள் என்னை மயக்கியே விட்டன. சமய நூல்களில் அவருக்கு இருந்த அபார ஞானமும் அப்பழுக்கற்ற அவரது ஒழுக்கமும் ஆத்மானுபூதியை அடைய வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வமுமே என்னை மயக்கியவை. ஆத்மானுபூதியை அடையவேண்டும் என்ற ஒன்றிற்காகவே அவர் வாழ்ந்து வந்தார் என்பதையும் பிறகு கண்டேன். முக்கானந்தரின் பாடல் ஒன்றை அவர் சதா உச்சரித்துக் கொண்டே இருப்பார். அது அவர் உள்ளத்தில் பதிக்கப்பட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
ராய்ச்சந்திர பாயின் வியாபாரம் பல லட்சக்கணக்கில் மூலதனம் கொண்டது. முத்து, வைரங்களைச் சோதித்துப் பார்ப்பதில் அவர் கைதேர்ந்தவர். எவ்வளவுதான் சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், அது அவருக்குக் கஷ்டமானதே அல்ல. ஆனால், அவருடைய வாழ்க்கையில் இவைகளெல்லாம் முக்கியமானவை அன்று. அவரது வாழ்க்கையில் மிகக் கேந்திரமாக இருந்தது கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்ற ஆர்வம் தான். அவருடைய வியாபார மேiஜ மீதிருக்கும் பல நூல்களுள், சில மத நூல்களும், அவருடைய தினகுறிப்பும் இருக்கும். வர்த்தக வேலை முடிந்ததுமே மத நூல்களையோ தினக்குறிப்பையோ பிரித்து விடுவார். அவர் எழுதிப் பிரசுரமாகியிருக்கும் பல நூல்கள் இந்தத் தினக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டவையே. பலமான வர்த்தக பேரங்களையெல்லாம் பேசிக் முடித்தவுடனேயே, ஆன்மாவில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால், அவர் உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஒரு தடவை இரண்டு தடவையன்று, அநேகமாக எப்பொழுதுமே தேடும் முயற்சியில் இவ்விதம் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன். சாந்தி நிலையிலிருந்து அவர் மனம் மாறுப்பட்டதாகவே நான் கண்டதில்லை.
எந்த ஒரு வியாபாரமும், சுயநலமும் என்னை அவருடன் பிணைக்கவில்லை என்றாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இன்புற்றேன். அப்பொழுது நான் வழக்கே இல்லாத வெறும் பாரிஸ்டர் என்றாலும் என்னைப் பார்க்கும் போதெல்லாம், சமய சம்பந்தமான முக்கியமான விஷயங்களைக் குறித்து என்னிடம் அவர் பேசுவார். அச்சமயம் நான் எதிலும் தெளிவில்லாது, இருளில் வழி தெரியாமல் தடவிக் கொண்டிருப்பவனாகவே இருந்தேன். சமய சம்பந்தமான விவாதங்களில் எனக்கு அதிகச் சிரத்தை இருந்ததாகச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் பேச்சு எனக்குக் கவர்ச்சி அளிப்பதாக இருந்ததைக் கண்டேன். அதற்குப் பிறகு மதத் தலைவர்கள் பலரையும் மத குருக்களையும் நான் சந்தித்திருக்கிறேன். பல மதங்களின் தலைவர்களைச் சந்திக்க முயன்றும் இருக்கிறேன். ராய்ச்சந்திரரைப் போல அவர்களில் யாருமே என் மனத்தைக் கவர்ந்ததில்லை என்பதை நான் சொல்ல வேண்டும். அவருடைய சொற்கள், என் உள்ளத்தில் நேரே சென்று பதிந்தன. ஒழுக்க சீலத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் போலவே அவருடைய அறிவாற்றலும் அவரிடம் நான் பெருமதிப்பு வைக்கும்படி செய்தது. அவர் விரும்பி என்னைத் தவறான வழியில் செலுத்திவிட மாட்டார். தமது அகநோக்கு எண்ணங்களை எல்லாம் என்னிடம் எப்பொழுதும் அவர் கூறுவார் என்ற உறுதியும் எனக்குப் புலப்பட்டது. ஆகையால், ஆன்மீகத் துறையில் எனக்கு சிக்கல் ஏற்பட்ட சமயங்களிலெல்லாம் அவரே எனக்குப் புகலிடமாக விளங்கினார்.
எனக்கு அவரிடம் எவ்வளவோ மதிப்பு இருந்தும், என் குருநாதராக எனது இதயபீடத்தில் அவரை நான் அமர்த்திக் கொள்ளவில்லை. அந்தச் சிம்மாசனம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அதில் அமர்வதற்கு ஏற்றவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக் கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபடவேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை.
இவ்விதம் ராய்ச்சந்திர பாயை என் உள்ளத்தின் சிங்காதனத்தில் குருவாக அமர்த்திக் கொள்ள என்னால் இயலாவிட்டாலும் அவர் அநேக சந்தர்ப்பங்களில் எவ்விதம் எனக்கு வழிகாட்டியாகவும் உதவி செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதை போகப் போகப் பார்ப்போம். இக்காலத்தவர்களில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் வாழ்க்கையில் ஆழ்ந்த சுவட்டை விட்டுச் சென்றோர் மூவர் ஆவர். ராய்ச்சந்திரர் தமது ஜீவியத் தொடர்பினாலும், டால்ஸ்டாய், ஆண்டவன் ராஜ்யம் உன்னுள்ளேயே என்ற தமது நூலினாலும் ரஸ்கின்;, "கடையனுக்கும் கதிமோட்சம்" என்ற நூலினாலும் அவ்வாறு செய்தனர். இவர்களைப் பற்றி உரிய இடங்களில் விரிவாகக் கூறுகிறேன்.
..................................................................................................................................................................

No comments:

Post a Comment