'எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டால்... கலர் டி.வி. இலவசம்', 'எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டால்... கிரைண்டர்-மிக்ஸி இலவசம்' என்றெல்லாம் கோஷம் போட்ட அரசியல் கட்சிகள்... சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது பெரும்குரலில் கொடுத்த வாக்குறுதி என்ன தெரியுமா?'எங்களுக்கு ஓட்டுப் போட்டால்... குடும்பத்துக்கு தினமும் 20 லிட்டர் மினரல் வாட்டர் கொடுக்கப்படும்’ என்பதுதான்!'மினரல் வாட்டர் என்றால் என்ன?' என்று முழுமையாக அறிந்திராத கிராமத்து மக்கள்கூட, 'மினரல் வாட்டர்' என்கிற பெயரில் நடமாடும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். பல வீடுகளில் மினரல் வாட்டர் தயாரிப்புக்கான சிறிய வகை கருவிகளையும் பொருத்தி வைத்துள்ளனர்!
இந்த நிலைமைக்குக் காரணம்... கிராமங்களில்கூட சுத்தமான குடிநீர் என்பது, சமீப ஆண்டுகளாக அரிதாகிக் கொண்டே இருப்பதுதான். திரும்பிய பக்கமெல்லாம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள், ஆறுகளில் ஈவு இரக்கமின்றி கலந்துவிடப்படும் ஆலைக் கழிவுகள், விவசாய நிலங்களில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள்... இவையெல்லாம் சேர்ந்து, நிலத்தடி நீரை முழுமையாக மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதன் எதிர்விளைவாக, கிராமங்களில்கூட சுத்தமான தண்ணீரைத் தேடி மக்கள் தாகத்தோடு திரியவேண்டிய கொடுமை! இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, கோடிகளில் பணம் புரளும் மினரல் வாட்டர் வியாபாரத்தை இங்கே பிரமாதமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தண்ணீரின் விலை, பாலின் விலையையே மிஞ்சும் அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது.
500 கிராம் அளவுக்குத்தான் தாதுக்கள் !
''உலக சுகாதார நிறுவனம், 122 நாடுகளில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் இடம் 120. ஒரு லிட்டர் குடிநீரில் 90 முதல் 500 மில்லி கிராம்அளவுக்குத்தான் 16 வகையான தாதுக்களின் கூட்டுத்தொகை இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய தண்ணீரில் 1,000 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக, இவையெல்லாம் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்... இயற்கையான தண்ணீர் சேகரிப்பு முறைகள் அழிக்கப்பட்டதும், கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாததும்தான். ஒரு லிட்டர் பிரேக் ஆயில், நீர்நிலையில் கலந்தால்... 1 லட்சத்து 58 ஆயிரம் லிட்டர் தண்ணீரை அது மாசுபடுத்திவிடும். ஒரு லிட்டர் கலந்தாலே இந்த கதி என்றால்... நம் நாட்டில் கணக்கு வழக்கில்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல், சுத்திகரிக்கப்படாமல், தொழிற்சாலைகளிலிருந்து நீர்நிலைகளில் பல லட்சம் லிட்டர் கழிவுகள் கலந்துவிடப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில்... இந்தியாவில் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்? காலம்காலமாக இயற்கையாகக் கிடைத்து வந்த தூய்மையான குடிநீரை, வளர்ச்சி என்ற பெயரில் பாழடித்துவிட்டு... பன்னாட்டு கம்பெனிகளும், பண முதலைகளும் விலை வைத்து விற்கும் தண்ணீரை வாங்கிக் குடிக்க வேண்டிய கட்டாயத்தை நாமேதான் உருவாக்கிக் கொண்டுவிட்டோம்.
மினரல் வாட்டர் அல்ல... வெறும் தண்ணீர்தான் !
இப்படி விற்கப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் தண்ணீரில் எந்தத்தாதுக்களும் இல்லை என்பதுதான் உண்மை. வெறும் தண்ணீரைத்தான் 'மினரல் வாட்டர்’ என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இதை எதிர்த்து எட்டு ஆண்டுகளுக்கு முன் நுகர்வோர் அமைப்பால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 'பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை மினரல் வாட்டர் என்று குறிப்பிடக் கூடாது. மேலும், அனுமதி இல்லாமல் நடத்தப்படும் 60% கம்பெனிகளை உடனே மூடவேண்டும்’ என்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, அத்தகைய நிறுவனங்கள் எல்லாம் முதல் நாள் மாலையில் இழுத்து மூடிய அவற்றின் உரிமையாளர்கள், மறுநாள் காலையில் வேறு பெயர்களில் கடைகளைத் திறந்து, பழையபடி விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீர், அதிக நாட்கள் இருப்பு வைக்கும்போது தரம் இல்லாமலும், நோய் தொற்றுள்ளதாகவும் மாறிவிடுகிறது. பாட்டில் தண்ணீரைத் தொடர்ந்து குடிக்கும்போது, மஞ்சள்காமாலை, எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படும்.
ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி !
தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியைத் தவிர, காவிரி, பாலாறு உள்ளிட்ட பெரிய நதிகள் பலவும் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகின்றன. அதனால், தண்ணீருக்காக நாம் மற்றொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'மினரல் வாட்டர்’ கம்பெனிகள் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு புழங்குகிறது என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்திய அளவில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாயை மினரல் வாட்டர் கம்பெனிகள் வருமானமாக பார்த்து வருகின்றன.தற்போது 70% அளவுக்கு தரமற்ற, நோய்த்தொற்றுள்ள தண்ணீர்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோக தண்ணீர் அடைக்கப்படும் பாட்டில்களும், பாலிதீன் பைகளும் பெரியளவில் நிலத்தை மாடுபடுத்தி வருகின்றன. இதையெல்லாம் அரசாங்கம் கண்டு கொள்வதேயில்லை.தண்ணீர் நிறுவனங்கள், ஒரு கிரவுண்ட் நிலத்தில், ஒரு போர்வெல்லைப் போட்டுக் கொண்டு, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுக்கின்றன. எல்லோருக்கும் பொதுவான தண்ணீரை தங்களுக்கு மட்டும் சொந்தம் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றன. இந்தத் தண்ணீர் கொள்ளையைத் தடுக்க 12 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் போட்டும், அது பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. அதுபோக நமது அரசியல்வாதிகள் நமது நீரை அண்டை நாட்டுக்குத் தாரை வார்க்கும் கொடுமையும் நடக்கிறது''
குக்கிராமம் தொட்ட மினரல் வாட்டர் !
''சாதாரணமா ஐந்தடி பள்ளம் தோண்டினாலே, தண்ணீர் கிடைச்சது அந்தக் காலம். இப்ப... ஆயிரம் அடி, ரெண்டாயிரம் அடி அளவுக்குகூட பல இடங்கள்ல நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம்... பூமிக்கடியில இருந்து அளவுக்கு அதிகமா தண்ணியை ராட்சஸ குழாய்களைப் போட்டு உறிஞ்சறதும்... மழைநீரை முறையா சேமிக்காததும்தான்.இதுக்காகத்தான் குளம், குட்டை, ஏரி, கண்மாய் இதையெல்லாம் நம்ம முன்னோருங்க உருவாக்கி வெச்சாங்க. ஆனா, இன்னிக்கு அரசாங்கம்... தனியார்னு ரெண்டு தரப்புமே நீர்நிலைகள ஆக்கிரமிக்கறதுல போட்டி போடறாங்க. மிச்சம் மீதி இருக்கற நீர்நிலைகளை குப்பைகளைக் கொட்டியே நாசம் செய்துகிட்டிருக்குது உள்ளாட்சி அமைப்புகள்.இதுவரைக்கும் இப்படி ஆக்கிரமிச்ச நீர்நிலைகளை திரும்ப வாங்கறதோட, எதிர்காலத்துல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கணும். இந்த விஷயத்துல உள்ளாட்சி அமைப்புகளே களத்துலஇறங்கி, கடுமையான தீர்மானங்களை நிறைவேத்தலாம். அந்த அமைப்புகளுக்கு அத்தனை அதிகாரம் இருக்கு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு, நீராதாரங்களைக் காப்பாத்தாம விட்டா.... நிலைமை இன்னமும் மோசமாகி, பாலைவன நாடுகள் மாதிரி தண்ணிக்கு நாமெல்லாம் ஏங்க வேண்டிய நிலை கட்டாயமா உருவாகிடும்''
நன்றி : விகடன்
No comments:
Post a Comment