ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...)


ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...)

10
வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15
வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18
வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21
வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26
வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35
வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத்தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் குட் நைட்என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50
வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60
வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.

No comments:

Post a Comment