த்தரி வெயில சமாளிக்க நம்ம நிறைய விஷயத்தை கடைபிடிக்க வேண்டியிருக்கு. சுட்டெரிக்கும் வெயிலால நம்ம
சருமம், கண், முடின்னு உடம்பில இருக்கிற எல்லா பார்ட்சும் பாதிக்கப்படும். முன்னெச்சரிக்கையா சில விஷயங்களை செஞ்சா பாதிப்பு கம்மியா இருக்கும். அது பத்தின சில டிப்ஸ் உங்களுக்காக...
ரொம்ப வெயில்னால உடம்பில நீர்ச்சத்து குறைஞ்சிடும். உடல் சோர்வு ஏற்படும். இதை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிங்க. ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிச்சா நல்லது. ப்ரிட்ஜ்ல வைச்ச ஜில் தண்ணிய விட மண்பானை தண்ணீர் ரொம்ப நல்லதுங்க. அதுல கொஞ்சம் துளசி இலைய போட்டு வைச்சு, அந்த தண்ணீர் குடிச்சா, உடனே புத்துணர்ச்சி கிடைச்சிடும். தாகமும் அடங்கும்.
குளிக்கிற தண்ணியில 4, 5 சொட்டு எலுமிச்சை சாற்றை ஊற்றி குளித்தால் வியர்வையின் தாக்கத்தை சற்று தணிக்கலாம்.அதிக வியர்வையினால் உடல் துர்நாற்றமும், வியர்குருவும் ஏற்படும். இதனால், சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பயத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த எலுமிச்சை பழத்தோல் ஆகியவற்றை பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம்.
சருமத்தை பாதுகாக்க கற்றாழை ஜெல் மிகச்சிறந்த மருந்தாகும். இதன் சாறை சருமத்தில் பூசி ஊற வைத்து குளிக்கலாம். வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள், டிராபிக் போலீசார் போன்றவர்கள் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாறு போன்ற வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த இயற்கை பானங்கள் மற்றும் பழச்சாறு குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு வியர்வையினால் பங்கல் இன்பெக்ஷன் ஏற்படும். மார்பக அடிப்பகுதி, அக்குள் போன்ற இடங்களில் வியர்வை தங்கி சரும பிரச்னை உண்டாகும். எனவே, மஞ்சள் தேய்த்து குளித்தால் நல்லது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும்.
தினமும் இரு வேளை குளிக்க வேண்டும்.
வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கவோ, முகம், கை கால் கழுவவோ கூடாது. சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வியர்வை காய்ந்த பின் குளிக்கலாம். ஏனெனில் சரும துவாரங்களில் வியர்வை புகுந்திருக்கும். இந்த துவாரங்கள் வழியாக நீர் உட்புகுந்தால் பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கூல்டிரிங்ஸ்களை தவிர்த்து விட்டு, தர்பூசணி, திராட்சை, கிர்ணிபழம், வெள்ளரி, நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். மோரில் அதிகளவு நீர் சேர்த்து குடிக்கலாம். அலுவலகத்தில் அதிக நேரம் ஏசியில் இருந்தால் தலைவலி உண்டாகும். அவ்வப்போது சில நிமிடங்கள் ஏசி அறையிலிருந்து வெளியில் வாருங்கள்.
காபி, டீ குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும், முதியவர்களும்தான். அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்கூறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை அதிக கவனத்துடன் கண்காணிப்பது நல்லது. அதிக சூட்டினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகலாம். அதற்கு, நுங்கை மசித்து கட்டி மீது தடவினால் விரைவில் குணமாகும்.
குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்க கூடாது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம்.
எண்ணெய் குளியல்
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆண்களும், பெண்களும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வது என்பது ரொம்பவும் குறைந்து விட்டது. ஒரு சிலர் மட்டும்தான், உடம்பு முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். கத்தரி வெயில் சமயங்களில் இந்த எண்ணெய் குளியல் ரொம்ப ரொம்ப நல்லது. வாரத்துக்கு ஒருமுறை அவசியம் எண்ணெய் மசாஜ் குளியல் செய்தால் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அதே போல, வெயிலில் செல்லும் முன்பு, தலை முடி, கை, கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் சூரிய வெப்பம் நேரடியாக நமது தோல்களை பதம்பார்ப்பதை தவிர்க்க முடியும். அதனால, எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க.
No comments:
Post a Comment