தாயின் கருவறையில் இருக்கும்போது
அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!
நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்..
நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.
முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..
அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி...
என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.
இதோ நானறிந்த தாலாட்டு..
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே, என் கண்மணியே
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
இப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.
No comments:
Post a Comment