உலக
அதிசயங்கள்
எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல்
உன்னையும்
சேர்த்திருப்பார்கள்.
***
உன்
கண்களில்
தொற்றிக் கிடக்கும்
காதலைச் சேகரிக்க
எத்தனிக்கிறேன்
நீயோ
மின்சார இழைகளை
இமைகளில் தேக்கி
தத்தளிக்க
வைக்கிறாய்.
***
நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல்
கிடக்கின்றன
என்
இமைகள்.
***
உன்
கண்கள்
ஆழ் மலர்க்
கேணிகள்.
பறித்ததை விட
அதிகமாய்
பறிகொடுத்திருக்கிறேன்.
***
ஒவ்வோர் முறை
நீ
என்னைப்
பார்த்துக்
கடக்கும் போதும்
என்
காதல் வலிமை
சேகரிக்கிறது.
நீ
ஒரு முறை
புன்னகைத்தால்
சேமித்த
அத்தனையும்
திருப்பித்
தரவும்
சம்மதமெனக்கு !
***
காதலும் கடலும்
ஒன்றே
ஆழமாய் மூழ்காத
கைகளில்
கிளிஞ்சல்களே
மிஞ்சும்.
***
காதலைச்
செதுக்குவதாய்
நினைத்து
நான் செய்த
உளிப்பிரயோகங்களில்
காதல்
என்னைச் செதுக்கி
முடித்தது
***
காதல்
பாதங்களுக்குக்
கீழ்
பரவிக் கிடக்கும்
பூமிபோல,
கால்கள்
கவனிக்காவிட்டாலும்
பூமி இருக்கும் !
பூமி கவனிக்க
மறுத்தால்
கால்கள்
நிலைப்பதில்லை.
***
உன்
முதல் பார்வை
என்னைத்
தழுவியபோது
உள்ளுக்குள்
உடைந்து நழுவிய
மெளனக்
கிண்ணங்களுக்கு
நான்
காதலென்று
பெயரிட்டேன்.
***
காதல்
எரியும் போது
வெளிச்சம்
அழியும் போது
இருள்.
சுண்டி விடப்பட்ட
ஒரு கிழமையின்
இரவு பகல் என்ற
இரு பக்கங்களைப்
போல.
***
உன்
விழித் தீ
விழாமல் போனால்
விழித்திருப்பதில்
அர்த்தமில்லை
என்பதை
அறிந்தும்,
ஆயிரம் அகல்கள்
எண்ணையில்
குளித்த
திரிகளோடு
காத்திருக்கிறது
காதல் கனல்
விழாத
பிரதேசங்களில்
எரிவதற்கு
என்ன இருக்கிறது ?
***
எத்தனை
வார்த்தைகளால்
சொன்னாலும்
உனக்குப்
புரியப்
போவதில்லை.
ஒரே ஒரு
முத்தத்தால்
உணர்த்தி விடவா
என் காதலை ?
***
உன்னோடான
என் காதலை
உணர்த்த
பனிப்
புற்களையும்
சுடு கற்களையும்
காட்ட வேண்டும்
நான்.
இரண்டும்
இணைந்தே
விளைகின்றன
என்
காதல் காடுகளில்
***
பிரேதப்
பரிசோதனையும்
பிரேமப்
பரிசோதனையும்
தகவல்களை
மட்டுமே தர
இயலும்.
வேண்டாம்
சோதனைக்
கூடத்தில்
காதலைத்
தயாரிக்கும்
விதிமுறை
யாருக்கும்
வாய்த்ததில்லை.
***
காதல்
ஓர்
புல்லாங்குழல்.
சரியான அளவு
காற்றைச்
செலுத்துவதில்
இருக்கிறது
வெற்றியும்
தோல்வியும்
***
அவிழ அவிழ
புதுப் புதுப்
புதிர்கள்
புதிதாய்
கிளைவிடுவது
காதலில் மட்டுமே.
புரிந்த இடத்தின்
முடிவில்
புரியாமையின்
ஆரம்பம்
முளைவிடுவதும்
காதலில் மட்டும்
தான்
***
காதல்
அதிகமான
உவமைகளால்
தாலாட்டப் பட்ட
உலகின் ஒரே
விஷயம்.
இன்னும்
உவமைகள்
உலர்ந்துவிடவில்லை.
காதல்
தலை குலுக்கும்
போதெல்லாம்
உதிர்ந்து கொண்டே
இருக்கின்றன
உவமைகள் !
***
உன்னைத்
தீண்ட வேண்டும்
எனும்
எண்ணமே
எனக்குள்
மொட்டுகளை
மலர்த்தி விடுகிறது.
தீண்டி விட்டால்
மலர்ந்தவை
உலர்ந்து விடுமோ
எனும்
அச்சமும் தலை
விரிக்கிறது.
***
நாமென்ன
இரட்டைக்
குழந்தைகளா ?
உனக்கு வலித்தால்
எனக்கு
கண்ணீர்
வருகிறதே.
***
ஒருமுறை தான்
காதல்
வருமென்பதெல்லாம்
பொய்யடி பெண்ணே,
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறது
உன்
ஒவ்வோர்
புன்னகையிலும்.
***
என் குறைகளைப்
பட்டியலிட்டுப்
பரிகசிப்பதை விட
நம்
நிறைகளைப்
பட்டியலிட்டுப்
பரிசீலிக்கலாமே ?
ஆனாலும்
காதல்
பட்டியல்களில்
பயிராவதில்லையடி.
உள்ளுக்குள்
உயிராவது.
***
உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ
முடியும் என்பதை
நீ
விலகியபோது தான்
உணர்ந்து
கொண்டேன்.
***
தேவதை
உனை
அன்பு செய்கிறேன்
நான் ஆத்திகன்
தானே !
***
உயிரைப் பார்க்க
முடியாது
என்றார்கள்.
நீ
தருகிறாய்
தினசரி தரிசனம்
***
எழுதியவர்களுக்கும்
புரியாத
ஒரே கவிதை
காதல்.
***
சாத்தானும்
கடவுளும்
சங்கமித்துக்
கொள்ளும்
வட்டப் பாதை
காதல் தான்
***
நான்
சொன்ன போதெல்லாம்
நீ
நம்ப மறுத்தாய்.
ஆனாலும்
நீ சொன்னால் நான்
நம்பி விடுவேன்.
சொல்லிவிடேன்
காதலை !
***
என்
காதலுக்குப்
பதிலாய்
ஏதேனும் தர
விரும்பினால்
உன்
காதலைத் தா.
கடலுக்குப்
பதிலாய்
வேறு எதைத் தர
இயலும்
நீ ?
***
உண்மைக் காதல்
என்னும்
உத்தரவாதத்துடன்
தான்
துவங்குகின்றன
அத்தனைப்
பொய்க்
காதல்களும்.
***
என்னோடு
நீ இருக்கிறாய்
என்பது
தேக நிலை.
நானாகவே
நீ இருக்கிறாய்
என்பதோ
தேவ நிலை.
***
என்
குறைகளோடே
என்னைக்
காதலிப்பதாய்
சொன்னபோது
செத்துப் போனது
நம் காதல்.
காதலித்தும்
எப்படிக்
குறைகள் தெரிந்தன
உனக்கு ?
***
காதலிப்பது
குற்றம்
என்கிறாய்.
சட்டம் தெரியாதா
உனக்கு
குற்றம் செய்யத்
தூண்டுவதும்
குற்றமடி !
***
காதலுக்காய்
நீ சொல்லும்
பதில்கள்
கேள்விகளையே
சூடி நின்றாலும்,
நீ
திரும்பக்
கேட்கும் கேள்விகளில்
பதில்கள் தான்
பொதிந்து
கிடக்கின்றன.
***
அந்த மலைகளும்
பள்ளத்தாக்கும்
எதிரொலிக்கத்
தயங்காத
வார்த்தைகளை
எதிரொலிக்க
நீ
தயங்குகிறாய்.
ஆனாலும்
நான்
எறிந்து கொண்டே
இருக்கிறேன்
எப்போதேனும்
எதிரொலி
வருமெனும்
எதிர்பார்ப்பில்
***
வாழ்க்கைக்கு
நிறைய தேவைகள்.
காதலுக்கு
ஒரே ஓர் தேவை
வாழ்க்கை.
***
கடிகாரத்தைப்
போலவே
காதலும்
நொடிக்கொரு தரம்
துடிப்பதற்கே
வாழ்கிறது.
***
மாற்றம்
நிரந்தரம்
என்றார்கள்,
காதலித்துத்
தோற்றவர்கள்.
நிரந்தரமாய்
மாற்றம்
என்றார்கள்
இதயம் மாற்றிக்
கொண்டவர்கள்.
***
நாம்
சந்தித்துக்
கொண்டபோது
விருப்பங்களை
விரல் மாற்றிக்
கொண்டோம்.
நம் விருப்பங்கள்
சந்தித்துக்
கொண்டபோது
நாம்
விலகத்
துவங்கினோம்.
எதுவும்
விரும்பாமலேயே
இருந்திருக்கலாம்.
***
புன்னகைக்கும்
கண்ணீருக்கும்
இடைப்பட்ட
தூரத்தில்
தான்
பயிராகின்றன
பலகோடிக்
காதல்கள்.
***
நீ சொன்னதற்கும்
நான்
சொல்லாததற்குமான
வார்த்தைகளுக்கு
இடையே
ஏராளமாய்
கிடக்கின்றன
உண்மையின்
வார்த்தைகள்.
***
உதடுகள் காதலில்
உரசும் வேளையில்
உடையா
மெளனம் உடைபடும்.
***
கனவில் கூடப்
பேசப் பயப்படும்
எனக்கு
நிஜம்
எதைத் தந்துவிடக்
கூடும் ?
***
இருட்டில்
கிடக்கும்
காகம் போல
என் காதலும்.
சத்தமிடும் வரை
சாத்தியமில்லை
என்றறிந்தும்
இருட்டென்னும்
பெரும் சிறகின்
அடியிலேயே
அடைந்து
கிடக்கிறது.
மெளனமாய்.
***
அந்தக் கிளி
புதிதாய் ஓர்
கூட்டுக்குள்
குடிபுக
ஆசைப்பட்டு
பறந்து விட்டது.
என்
கூட்டுக்குள்
இன்னும் அந்த
சிறகோசைகள்
அகலவேயில்லை.
***
பையில் போட்டு
கையில் எடுக்கும்
தெருவோர
மாயாஜாலமாய்
காதல்.
என் மனசில்
போட்டுவிட்டேன்
உன் மனசில்
எடுக்க
முடிந்தால்
வெற்றி.
***
நீ கொடுத்த
பூக்கள்,
பரிசுகள்,
அட்டைகள்
என எல்லாம்
மறந்து விட்டன.
ஆனாலும்
ஈரமாய்
இருக்கிறது
கடைசியாய்
உள்ளங்கையில் நீ
வடித்த
கண்ணீர்த் துளி.
***
காதலின் அடர்த்தி
குறையக் குறைய
குறைகளின்
பட்டியல்
வீர்த்துப்
பெருக்கும்.
***
நான் காணும்
இரவுக்
கனவுகளுக்கான
பதிலை
பகலில்
சந்திக்கும் போது
நீ
தருவாயானால்
அங்கே முளைக்கும்
என் காதல் நதி.
***
நட்சத்திரங்களை
எண்ணி
முடித்தபின் உன்
விரல்களை
எண்ணவும்,
நிலவை
கண்டு
திரும்பியதும்
அதன் பிம்பம்
காணவும்
என்னருகே
நீ இருக்க
விரும்புகிறது
மனம்.
தனியாய்
தரைகிளறும்
மாமர
நிலா நிழல்
பொழுதுகளில்.
***
காதல்
உலகத்தின்
அளவென்றால்
மிச்ச அளவை
எங்கே வைப்பதடி ?
பேசாமல்
உன் கண் அளவு
என்று சொல்
இன்னும்
அந்தக்
கிரகத்தின்
தன்மை அறியவில்லை
விஞ்ஞானம்.
***
தொப்பலால்
நனையும்
பொழுதுகளை விட
சாரலில்
கண் நனைப்பது
கவித்துவமானது.
காதலில் மட்டும்
சாரலோடு
திருப்திப்பட
தெரிந்து
கொள்ளவில்லை மனசு !
***
தோற்றுப்
போகுமென்று
முதலிலேயே
தெரிந்தும் கூட
தோற்றுப் போக
சம்மதிக்கும்
ஒரே தளம்
காதல் தான்.
***
உனக்குள்
காதல் முளை
விட்டபோது
எனக்குள் தானடி
அது
கிளைகளை
விரித்தது.
நீ
முளையைக் கிள்ளி
விட்டாய்
இந்தக்
கிளைகளை என்ன
செய்வது
நான் ?
***
அறிவில்லையா ?
என்கிறாய்
என் இதயத்துக்கு
மூளை இல்லை.
உன்
மூளைக்கு
இதயம் இல்லை
***
என்
காதல்
வெளிச்சங்களின் மேல்
நீ
ஊற்றிக் கொண்டே
இருக்கிறாய்
துளித்துளியாய்
இருட்டு.
எனக்கு
வெளிச்சம் தருவதை
விட
இருட்டைத்
துரத்துவதிலேயே
கழிகின்றன
என் நெருப்பு
நாட்கள்
***
நீ
பிரிகிறேன் என்று
சொன்னபோது
எனக்குள்
ஒரு கோடி
சர்ப்பங்கள்
படமெடுத்துப்
பாய்ந்தன.
பிரிவதாய்
சொன்னதாலல்ல
உன்
விழிகளில் வழிந்த
சில துளிக்
காதலுக்காக.
***
எத்தனை
அழகென்று
சொல்லமுடியாப்
பட்டியலில்
உன்
விழிகளையும்
சேர்த்து விட்டேன்.
***
என்
சன்னலுக்கு
வெளியே
பறந்து திரியும்
புள்ளினங்களை விட
என்
கண்களுக்கு உள்ளே
பறந்து திரியும்
உன்
பட்டாம்பூச்சிப்
புன்னகைக்கே
வண்ணச் சிறகுகள்
ஏராளம்.
***
சட்டையைக் கழற்றி
ஆணியில்
மாட்டுவது போல
என்
கவலைகளைக் கழற்றி
விட்டேன்
நீ
சிரித்தது
எனக்காய் என்பது
புரிந்த
வினாடியில்
***
இந்த வயசில்
காதலா
என்று தான்
எல்லோரும்
கேட்கிறீர்கள்
அது சரி
எந்த வயதில்
காதலித்தால்
ஒத்துக்
கொள்வீர்கள் ?
***
காதல்
ஓர்
வித்தியாச
நெருப்பு.
தொட்டால்
சில்லிட்டும்
விலகினால்
எரித்தும்…
***
கொட்டப்பட்ட
காலம்
நமக்கிடையேயான
கணங்களைக்
கொஞ்சம்
மூடிவிட்டன,
ஆனால்
ரணங்கள் இன்னும்
அப்படியே…
***
காதல்
என்
கரம்பிடித்து
நடந்தபோதெல்லாம்
யாரும்
அழகாய்
தெரியவில்லை.
எதிர்ப்படுவோர்
அழகாய் தெரிந்த
ஓர் கணத்தில்
திரும்பிப்
பார்த்தேன்
திரும்பி
நடந்து
கொண்டிருந்தது
என் காதல்.
***
பூமி
சிலிர்த்துக்
கொள்ளும்
வினாடியில்
புதைந்து போகும்
உயிர்கள் போல,
நீ
மறுத்து
நடுங்கியபோது
புதைந்து போனது
என்
ஒற்றைக் காதலும்
ஏறக்குறைய
ஆறு கோடிக்
கனவுகளும்.
***
நீ
சிரித்துக்
கொண்டே
ஒரு
கவிதை வாசித்தாய்
பிரமித்துப் போய்
பார்த்திருந்தேன்
நான்
அற்புதக் கவிதை
அது.
வீட்டுக்கு வந்து
தனிமையில்
வாசித்தபோது தான்
புரிந்தது
கவிதை
மிகச் சாதாரணம்
***
நீ
அருகில்
இருக்கும் போது
அலைகடல்
சத்தம் கூட
மெல்ல காது
குடைந்து
கடந்து போகிறது.
நீ
விலகி விட்டாலோ
காது குடையும்
சத்ததிலேயே
செத்துப்
போகிறேன்
நான்.
***
நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும்
சொல்லியிருக்கிறேன்.
இப்போது
நல்ல
இசை கேட்கும்
போதெல்லாம்
நீ
பேசுவது
போலிருக்கிறது
எனக்கு.
***
வாழ்க்கைக்குத்
தேவையான
வருவாய்
இல்லையென்றே
பல
காதல்கள்
பிரிக்கப் படுகின்றன.
பின்
அவை
பணத்தை எண்ணிக்
கொண்டும்
இழந்த காதலை
எண்ணிக் கொண்டும்
தேவையான
வாழ்க்கையைத்
தொலைத்து
விடுகின்றன
இந்த கவிதைக்கு சொந்தகாரர்:
சேவியர்
writerxavier@gmail.com
வலை தளம்: https://xavi.wordpress.com/
No comments:
Post a Comment