ஒரு கீரியின் கதை


பல வருடங்களாக தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் கோவில் கோவிலாக ஒரு தம்பதியினர் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் கோவிலின் வேண்டுதல்களை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஒரு அடர்ந்த புதரில் அடிபட்ட காயங்களுடன் பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குட்டி கீரிப்பிள்ளை அழுது புரண்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.

உடனே இருவரும் அதனிடம் ஓடிச்சென்று கீரியை தூக்கி தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்றி அதை வீட்டிற்கு கொண்டுசென்று அதற்கு தேவையான மருந்து, பழங்கள், உணவுகளை கொடுத்து அதனின் உடலையும், உயிரையும் பரிபூரணமாக காப்பாற்றி விடுகிறார்கள்.

சிறிது நாட்களுக்கு பிறகு கீரிதான் சரியாகிவிட்டதே நம்மிடம் இனி இது எதற்கு? நாமே தினமும் கோவில் கோவிலாக பிள்ளை பாக்கியம் கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம், இதில் இதைவேறு எப்படி பார்த்துக் கொள்வது? எனவே இதை காட்டில் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று மனைவியிடம் கணவன் கூறுகின்றான்.

இத்தனை வருடங்களாக பிள்ளையே இல்லாத நமக்கு இது ஒரு பிள்ளையாக துணையாக இருந்துவிட்டு போகட்டுமென்று கீரியை காட்டில் கொண்டு சென்றுவிட மனைவி மன்றாடி மறுக்கிறாள்.

அவள் சொல்வது போலவே ஒரு ஓரமாய் துணையாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கணவனும் அதற்கு சம்திக்கின்றான்
நாட்கள் சுழலுகிறது, குழந்தையாக இருந்த கீரியும் சர சரவென வளர்ந்து பெரிதாகிறது.

குழந்தையே இல்லாத அவ்வீட்டில் குழந்தை போல் அங்கும் இங்கும் தாவி, ஒடி ஆடி, கொஞ்சி விளையாடி தம்பதி இருவரையும் குழந்தை போல் மகிழ்ச்சி குதுகலபடுத்துகிறது
வெகு குறுகிய நாட்களிலே ஊரிலுள்ள சிறுவர், பெரியவர் அனைவருக்குமே கீரி செல்லப்பிள்ளையாக மாறுகிறது
சிறுவர்களை மகிழ்ச்சி படுத்துவதிலிருந்து, அவர்களோடு ஒன்றாக இணைந்து உணவுகள் உண்ணும் வரை அனைவருக்குமே இஷ்ட்டமான ஒரு செல்ல பிள்ளையாக கீரி ஊரில் உலா வளர்கிறது.

இப்படியே சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் கீரியை வளர்த்து வந்த அப்பெண் ஒரு நாள் கருவுறுகிறாள், நம்மிடம் கீரி பிள்ளை வந்த நேரம் தான் நமக்கு இந்த பாக்கியம் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்திருக்கிறதென்று உள்ளம் பூரித்து ஊர் முழுக்க இனிப்புகளை கொண்டுசென்று அனைவருக்கும் அள்ளி வழங்குகின்றாள்.

இனிப்புகள் வழங்கும் ஒவ்வொரு வீடுகளிலுமே  "இனிதான் உனக்கென்று ஒரு பிள்ளை பிறக்க போகிறது, இனி அந்த கீரிப்பிள்ளை உனக்கெதறக்கு? கொண்டுசென்று அதை காட்டிலேயே விட்டுவிடு, இல்லையென்றால் நீ இல்லாத சமயங்களில் உன் பிள்ளையை கடித்து ஆபத்தை உண்டாக்கிவிடும்" என்று அவளிடம் அறிவுரைகளாக முன் வைக்கின்றார்கள்.

குழம்பிய நிலையில் வீட்டிற்கு செல்பவள் மூலையில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் கீரியை பார்த்தவுடன், அவர்கள் சொன்ன அத்தனை அறிவுரை, எச்சரிக்கைகளும் மறந்து போகிறது, கீரியை ஆசையோடு கைகளை நீட்டி அழைக்கின்றாள், அவள் அழைப்பதை பார்த்ததுமே கீரி எகிறி குதித்து ஓடோடி வந்து அவள் மீதேறி கன்னங்களை நக்கி கொஞ்சி அன்போடு அவளுடன் விளையாடுகிறது.

கீரி அவளை அம்மாவாகவும், அவள் கீரியை தன் பிள்ளையாகவும் மகிழ்ந்து பாவித்து நாட்கள் மீண்டும் மாதங்கள் சுழலுகிறது.

சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்த்தபடியே அவளுக்கு ஒரு அழகான ஆண் குழுந்தை பிறக்கிறது, பல வருடகளுக்கு பிறகு பிறந்திருக்கும் குழந்தை என்பதால் வீடே திருவிழா போல் காட்சியளிக்கிறது, கீரி முதல் சிறுவர்கள் வரை ஆடி பாடி அனைவரும் மகிழ்கின்றார்கள்.

மீண்டும் மாதங்கள் சுழல்கிறது
அவள் அருகில் இருக்கும் போதே பிறந்திருக்கும் குழந்தையின் மீது ஏறி விளையாடுவது, குழந்தையை கொஞ்சுவது, குழுந்தையிடமே படுத்து உறங்குவதென்று ஒட்டி பிறந்த சகோதரனை போல் அக்குழுந்தையிடம் ஆடி பாடி மகிழ்கிறது கீரி, இதை சிரித்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் அவளும் ரசிக்கின்றாள்
ஆனால் குழந்தையிடம் கீரி இப்படி ஒட்டி உராய்ந்து விளையாடுவதை காணும் பலரும், இது நிச்சயமாக ஆபத்து, எனவே இதை கொண்டுசென்று திரும்ப காட்டிலே விட்டுவிடு, குழந்தை பிறந்த பிறகு இனியும் இது உனக்கு வேண்டாம் என்று மீண்டும் அவளை எச்சரித்து திட்டுகிறார்கள்.

ஆனால் எல்லொரும் சொல்வதைப் போல் உள்ளுக்குள் அவளுக்கும் பயமிருந்தாலும், சின்னதுலிருந்து தன் பிள்ளையை போல் பாவித்து வளர்த்து விட்டதால் கீரியை காட்டில் கொண்டுசென்று விட மனமில்லாமல் மீண்டும் அதே பாசத்துடன் கீரியிடம் அன்பு காட்டி வளர்க்க ஆரம்பிக்க வளர்க்கிறாள்.

மீண்டும் நாட்கள் சுழலுகிறது
ஒரு நாள் தன் வீட்டில் தண்ணீர் வராததால் தெருமுனை வரை சென்று குடிக்க ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரலாமென்று
குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியே புறப்படுகிறாள்.


இருபது நிமிடங்களுக்கு பிறகு குடம் நிறைய தண்ணீரை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு அவள் திரும்பிக் கொண்டிருக்கும் போது
தொலைவில் வேக வேகமாக தன்னுடைய கீரி முகம் முழுக்க இரத்தங்களுடன் அவளை நோக்கி ஓடிவருவதைக் கண்டு பதறிப்போய் யோசிக்கிறாள்.

ஊரார் சொன்னது போல அந்த கீரி தனியாக விட்டுவிட்டு வந்த நம் குழந்தையை கடித்துக் கொதறி சாவடித்துவிட்டு நம்மருகே ஓடோடி வந்திருக்கிறது என்றென்னி, ஆத்திரத்தில் இடுப்பில் வைத்திருந்த தண்ணீர் குடத்தை அப்படியே கீரியின் மேல் போட்டுவிட்டு வீட்டை நோக்கி பதறி அடித்தவாறே அழுதுகொண்டே ஓடுகிறாள்
உள்ளே சென்றதும் அறை முழுக்க இரத்தம்!!

வேகமாக ஓடிச்சென்று குழந்தையை தூக்கி பார்க்கிறாள், ஆனால் குழந்தையின் உடலில் ஒரு காயங்கள் கூட இல்லை, குழந்தையும் தலைசாய்த்து கொண்டு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது, பின் எப்படி இவ்வளவு இரத்தம் என்று அறை முழுக்க ஆராய்ந்து தேடுகிறாள், அங்கே குழந்தை படுத்திருந்த தலையின் பக்கவாட்டில் ஒரு பெரிய நல்ல பாம்பு கடிப்பட்டு இரத்த காயங்களுடன் இரத்தம் சொட்ட இறந்து கிடக்கிறது.

உனே பெருமூச்சு விட்டு குழந்தையை தூக்கி அள்ளி அனைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு மீண்டும் கீரியின் ஞாபகம் வருகிறது, உடனே பதறி அடித்து கொண்டு குழந்தையோடு தெருவக்கு ஓடிச்சென்று பார்க்கிறாள்.

தண்ணீர் குடத்தின் கீழ் சிக்கி, தலை, உடல் முழுவதும் நசுங்கி, இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கீரி அங்கே இறந்து கிடக்கிறது
குழந்தையை பாம்பிடமிருந்து  காப்பாற்றிவிட்டு அதை மகிழ்ச்சியோடு அம்மாவிடம் சொல்லலாம் என்று ஓடோடி வந்த நான் சுமந்து வளர்த்த என் கீரிப்பிள்ளையை நானே என் கையால் கொன்றுவிட்டேனே என்று மார்பில் அடித்து கொண்டு கதறி, கத்தி உருண்டு பிரண்டு அழுகிறாள்.

அவளோடு சேர்ந்து இறந்து கிடந்த கீரியை பார்த்து ஊரும் சேர்ந்து அழுகிறது.

நம்மிடம் உண்மையோடும், அன்போடும் இருப்பவர்களை நாம் ஆழமாக புரிந்து கொள்ளாததே நம் வாழ்க்கையின் அத்துணை பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்குமான அடிப்படை காரணம்,
எவரும் எதைப்பற்றி, எது சொன்னாலும் நம்முடன் இருப்பவரை எங்கும், எதிலும் எப்போதும், யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது
நம்முடன் இருப்பவரோடு அன்பை புரிந்துக் கொண்டு, அன்பை பரிமாறி வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை தினம் தினம் மகிழ்ச்சிகள் பூக்கம் பூந்தோட்டமாய் பூரிக்கும்
நாம் அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அத்துணையும் தவறே
உலக உயிர்களுக்கிடையே நிலவும் அத்துணை மகிழ்ச்சிகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒரு தாரகமந்திரம் 

புரிதல் என்பதே இந்த கதையின் சாராம்சம்




No comments:

Post a Comment