பதின்பருவப்
பையன்போல நம்மாழ்வார் ஓடித் திரிந்து இயற்கை
விவசாயத்துக்கு நீர் பாய்ச்சியதால், இன்று
தமிழகம் முழுக்கப் பரவலாக பல்லாயிரம் ஏக்கரில்
பச்சை கட்டியிருக்கிறது இயற்கை விவசாயம். நம்மாழ்வாருக்கு
வயது 75. வெண்தாடியைக் கோதிக்கொண்டே பிரகாசப் புன்னகை பூக்கிறார்.
''இயற்கை
விவசாயத்தின் அவசியம் புரிகிறது. ஆனால்,
இளைஞர்களை அதன்பால் இழுக்கும் அளவுக்கு அது லாபமாக அமையுமா?''
''தண்ணீர்
அதிக அளவு தேவைப்படாத, நிதி
வசதி அதிகம் தேவைப்படாத, ஏகமாக
தொழிலாளர்கள் தேவைப்படாத விவசாய முறையே நம்
இயற்கை விவசாயம். நிலம் வாங்கியோ அல்லது
குத்தகைக்கு எடுத்தோ, இன்று இளைஞர்கள் விவசாயம்
செய்ய வருகிறார்கள். இயற்கை நெல் ரகங்களைப்
பொறுத்தவரை வருடம் முழுக்கத் தண்ணீர்
தேவை இல்லை. நிலம்
வெடித்துப் பாளம் ஆகாமல் ஈரமாக
இருக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தாலே போதும். மாப்பிள்ளைச் சம்பா,
சம்பா மோசனம், மடு முழுங்கி,
காட்டுயானம், சீரகச் சம்பா என
சுமார் 63 ரகங்கள் இப்போது இருக்கின்றன.
பசுமைப் புரட்சிக்கு முன்னர் பல லட்சம்
இயற்கைப் பயிர் வகைகள் இந்தியாவில்
இருந்தன. இந்த இயற்கை விதைகளைத்
திருடித்தான் ரசாயனப் பயிர்களான வைக்கோல்
இல்லாத முக்கால் அடி உயரப் பயிர்
ரகங்களை உருவாக்கினார்கள். ரசாயன மருந்து தெளித்து
விளைவிக்கப்பட்ட பயிர்கள் நோய்களைப் பெருக்கிவரும் நிலையில், இப்போது இயற்கை உணவுகளுக்குக்
கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரசாயன விவசாயத்தைவிட இயற்கை
விவசாயம்தான் இன்றைய தேதியில் லாபமானது.
தமிழகம் எங்கும் சுமார் 20 ஆயிரம்
ஏக்கருக்கு மேல் லாபகரமான முறையில்
இயற்கை விவசாயம் நடக்கிறது. குதிரைவாலியும், சீரகச் சம்பாவும் அதை
விளைவிப்பவர்களைக் கடனாளி ஆக்குவதும் இல்லை,
உண்பவர்களை நோய்வாய்ப்படுத்துவதும் இல்லை. இந்த நிதர்சனத்தைப்
புரிந்துகொண்ட பல இளைஞர்கள், இன்றைக்கு
இயற்கை விவசாயத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த விவசாயிகள் மக்கள்
நாயகர்களாக உருவாகுவார்கள். இந்த ஆரோக்கியமான போக்கின்மீது
மேலும் வெளிச்சம் பாய்ச்ச, வருடம்தோறும் நெல் விழா நடத்துகிறோம்.
இந்த வருடத்துக்கான விழா மே 25, 26-ம்
தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடக்கிறது. சுமார் 3,000 விவசாயிகள் நெல்லைப் பரிமாறிக்கொள்ளப்போகிறார்கள். மெதுமெதுவாகவேனும் இனி விவசாயம் தமிழகத்தில்
தழைத்தோங்கும்!''
''ஆனால்,
தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்தும்
சட்டம், இந்த நாடாளுமன்றக் கூட்டத்
தொடரில் நிறைவேறும்போல் இருக்கிறதே?''
''இனி,
தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட
விலையைவிட, நான்கு மடங்கு கூடுதலான
விலை கொடுத்து நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின்
முடிவு. அதாவது, இந்த மசோதாவின்
மூலம் நில அபகரிப்பைச் சட்டப்பூர்வமாக்க
இருக்கிறார்கள். எம்.எஸ்.சுவாமிநாதன்
'தேசிய உழவர் நல ஆணையம்’
என்றோர் அமைப்பை உருவாக்கி, அதற்குத்
தலைவராக இருந்துகொண்டு ஓர் அறிக்கையை மத்திய
அரசுக்குக் கொடுத்தார். அதில் மாற்றுத் தொழில்
கிடைத்தால் 40 சதவிகித விவசாயிகள் விவசாயத்தைக்
கைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். அதன்
அடிப்படையில் அமைந்த, ஆசை காட்டி
மோசம் செய்யும் வேலைதான் அந்த மசோதா!''
''வளர்ச்சியின்
பெயரால் நிறைவேற்றப்படும் மசோ தாக்கள், மக்கள்
உரிமைகளைப் பாதிக்கிறது என்பது உண்மையா?''
''ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது
என்றால், இந்தியக் குடிமக்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஒரு உரிமை பறிபோகிறது
என்று பொருள். விளை நிலங்களை
அழித்து, ரசாயன ஆலைகள் அமைத்து,
விவசாயத்துக்கு வழங்கிய மானியங்களைக் குறைத்து,
பன்னாட்டு நிறுவனங்களிடம் உணவு உற்பத்தியைக் கொடுத்து
என விவசாயிகளை நிலத்தில் இருந்து துரத்தியடித்தார்கள். இப்போது உணவுப்பொருட்களின்
தேவை அதிகரிக்கவும் உணவுப் பாதுகாப்பு மசோதா
கொண்டுவருகிறார் கள். உணவு உற்பத்தியில்
நமது விவசாயிகள் தன்னிறைவு அடைந்த காலம் ஒன்று
உண்டு. ஆனால், வருடம் நான்கு
போகம் விளைவித்த உழவனை எலிக் கறி
உண்ணும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைய சந்தை அரசியல்.
கடந்த ஆண்டு காவிரியில் தர
வேண்டிய தண்ணீரை, மத்திய அரசு வாங்கித்
தரவில்லை. விளைவு, 10 லட்சம் ஏக்கர் பயிர்கள்
பட்டுப்போய்விட்டன. 'காவிரியில் தண்ணீர் இல்லை. அதனால்,
பயிர்கள் விளைச்சல் இல்லை!’ என்று மட்டுமே
இதைப் பார்க்கக் கூடாது. மாடு கன்றுகளுக்கும்,
மக்களுக்கும் குடிநீர் இல்லாமல் போகிறது. மக்கள் தண்ணீரைக் காசு
கொடுத்துப் பெற்றுக்கொள்கிறார்கள். காசு கொடுத்துத் தண்ணீர்
வாங்கிக் குடிக்க முடியாத மாடுகள்
என்ன ஆகும்? நோஞ்சானாகி உழவுக்குப்
பயன்படாத அடிமாடுகளாக ஆகிவிடுகின்றன!''
''காவிரித்
தீர்ப்புதான் மத்திய அரசிதழில் வந்துவிட்டதே?''
''கடைமடைக்கு
வராத காவிரி, டெல்லி அரசிதழில்
வந்தது தமிழக அரசின் சாதனை
என்று சொல்லிக்கொள்ளலாம்தான். காவிரியில் நமக்கு விட வேண்டிய
தண்ணீரை ஏரி, குளங் களில்
சேமித்துவைத்துவிட்டுத் தண்ணீர் இல்லை என்கிறது
கர்நாடகம். இந்த நிலையில், 'நீதிமன்றம்
சொல்கிற தீர்ப்பைச் செயல்படுத்துவது யார்?’ என்ற கேள்வி
எழுகிறது. அந்தப் பொறுப்பு நிரம்பிய
மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது.
நீதிமன்றம் உத்தரவு மட்டுமே போடுகிறது.
முரண்டுபிடிக்கும் மாநில அரசு செயல்படாமல்
இருப்பதால் உத்தரவு, உத்தரவாக மட்டுமே இருக்கிறது. இனி,
வருங்காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு தேவை. இதே
கோரிக்கையோடு தீர்ப்புகளைச் செயல்படுத்தும் செயல் கமிட்டி தேவை
என தமிழக அரசு கோரியிருக்கிறது.
நாம் நீதிமன்ற உத்தரவுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில்,
காவிரிப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாகச் செயல் கமிட்டி அமைய
வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின்
விருப்பம்!''
''ஒரு குடம் குடிநீருக்காக மக்கள்
அலைபாயும் நிலை உருவாகிவிட்டதே?''
''அதிக
மழை, அதிக வெப்பம், அதிகக்
குளிர், அல்லது பருவ மழையே
இல்லாமல்போவது என்ற சூழலில், தமிழகத்தில்
ஜீவ நதிகள் என்று எதுவுமே
இல்லாத நிலையில்... எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு தண்ணீரைச் சேமித்தால் மட்டுமே தண்ணீர்ப் பஞ்சத்தில்
இருந்து நாம் தப்ப முடியும்.
கிட்டத்தட்ட 36,000 ஏரி, குளங்களைக்கொண்ட நீராதாரம்தான்
நம்முடையது. இதைக்கொண்டே வருடம் நான்கு போகம்
விளைச்சல் நடந்தது. ஆனால், அந்த ரத்த
நாளங்கள் உண்டாக்கிய வளங்களை மணல் கொள்ளையர்கள்
தின்றுவிட்டார்கள். விளை நிலங்களை ரியல்
எஸ்டேட் பேர்வழிகள் திருடிவிட்டார்கள். சிறிய ஆறுகள் இருந்த
சுவடே தெரியாமல் கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. போதாக்குறைக்கு
அரசு புதிதாகக் கட்டிய நீதிமன்றங்கள், மாவட்ட
ஆட்சியர் அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையங்கள்
என எல்லாவற்றையும் ஏரி, குளங்களில் கட்டிவைத்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் நமது நீராதாரம்பற்றிய எந்த
அக்கறையும் இல்லாமல் சுயநலமாக நாம் நடந்துகொண்டதன் பின்விளைவுதான்,
ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள்
இன்று அலையும் நிலை!''
''கூட்டுக்
குடிநீர்த் திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டனவா?''
''காலம்
காலமாக நீர் நிர்வாகத்தைச் சிறப்பாக
நிர்வகித்து வந்தவர்கள் கிராம மக்கள்தான். பாசனக்
கட்டமைப்பை விரிவுபடுத்துவது என்னும் நோக்கத்தில்தான் பொதுப்பணித்
துறை அதில் தலையிட்டது. தனது
தண்ணீர்த் தேவைகளை, தானே தீர்த்துக்கொண்ட அந்த
மேலாண்மை சிதைக்கப்பட்டது. கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்பது கிராமத்தில்
இருந்து தண்ணீரை எடுத்து, நகர்ப்புற
மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்திசெய்வதாக அமைந்ததுதான்
சிக்கலாகிப்போனது. விவசாயமே நடக்காத நகரத்துக்கு விளை
நிலங்களின் தண்ணீரை எடுத்துக் கொடுத்தபோதே,
கூட்டுக் குடிநீர்த் திட்டம் தோல்வி அடைந்துவிடுகிறது.
நகர மக்களின் தண்ணீர்த் தேவையை, தண்ணீரைச் சேமிப்பதன்
மூலமே சரிசெய்ய முடியும். தங்கத்தைச் சேமிக்கும் மக்களுக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை!''
''மது ஒழிப்புக்காக வைகோவும் தமிழருவி மணியனும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அது தொடர்பான விவாதங்களின்போது
மறக்காமல் எழுப்பப்படும் கேள்வி இது... கள்
எனப்படுவது உணவா... மதுவா?''
''மதுவை
ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்களோடு
நானும் இணைகிறேன். ஆனால், கள் என்பது
அதிக போதை தரக்கூடிய மதுவல்ல;
அது உணவாகவும் மருந்தாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்துவந்துள்ளது. அதைப்
பனம் பாலாகவும், தென்னம் பாலாகவும் பார்க்க
வேண்டும். சுமார் 15 லட்சம் பனை, தென்னை
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். கள் இறக்கும் உரிமை
வேண்டும் என்று பல ஆண்டுகளாகப்
போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் பக்கம்தான் நான் நிற்பேன். அவர்களின்
நலனுக்காக மதுவை ஒழித்தால், அது
மக்கள் நல நடவடிக்கையாக இருக்கும்!''
-டி.அருள் எழிலன்,
நன்றி:
ஆனந்தவிகடன், 22-05-2013
No comments:
Post a Comment