தலைவன் - பஞ்சதந்திர கதைகள்


அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது' என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.

அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.


(எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.)

No comments:

Post a Comment