நீர்,
மோர், ஜூஸ், தர்பீஸ், இளநீர்... எதை உள்ளே தள்ளினாலும் வயிறு குளிர்வதாய் தெரியவில்லை. அடிக்கிற பங்குனி வெயிலில் அவ்வளவு உஷ்ணம். ‘வேற என்னதான் இருக்கு’ என்று தேடியபோதுதான் அந்தச் சத்தம்...
‘பதனி...
பதனீ...’ என்றபடி தூத்துக்குடி பக்கத்து ரோட்டோரத்தில் பதனீர் விற்கும் பெண் ஒருவர் செம்பு பதனீரை பட்டை பிடித்து வாடிக்கையாளருக்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘‘இன்னிக்கு நல்ல யாவாரம் சார். மண்டியாயிடுச்சு. நாளைக்கு இந்நேரத்துக்கு கொண்டு வந்திடுறேன்’’ என்றார் காத்திருந்த இன்னொருவரிடம்.
.
சூடு
பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பதனீர் விற்பனை.
‘‘மாசியில
இருந்து வைகாசி வரைக்கும் பனைகளுக்குள்ளதான் பொழப்பு. கருக்கல்ல பனை ஏறுனாத்தான் சிந்தாம, சிதறாம இறக்கி, பக்குவமா சுண்ணாம்பு சேர்த்து கொஞ்ச நேரம் ஊறவிட்டு வச்சு, விக்கறதுக்கு எடுத்துட்டுப் போக சரியா இருக்கும். பத்து மணிக்கு மேல யாவாரம் இருக்காது. அதுக்கு மேல மிஞ்சிப்போற பதனி வெயிலுக்குத் தாங்காமப் புளிச்சிடும். அதேபோல முதல்நாள் சாயங்காலம் பாளை சீவி விடறதைப் பொறுத்துத்தான் பதனீ சுரக்கும். இப்படி அடுத்தடுத்து வேலைங்க இருந்துக்கிட்டே இருக்கும். அதனாலதான் இங்கயே குச்சல் போட்டுத் தங்கிடுறோம்’’ என்கிறார் தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி.
பனைத்
தொழிலாளர்களைப் பொறுத்தவரை இந்தப் பதனீர் சீசனைத்தான் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் நம்புகிறார்கள். சுரக்கும் பதனீரின் அளவு பனைகளைப் பொறுத்து வித்தியாசப்படுமாம். ‘விக்காம மிஞ்சுற பதனியை உடனே கருப்பட்டி காய்ச்ச அனுப்பிடுறோம்’ என்கிறார்கள். ‘சொந்தமாக பனை இல்லை’ என்கிற கவலையும் இவர்களுக்கில்லை. புறம்போக்கு நிலங்களில் உள்ள பனைகளைத் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசே அனுமதித்திருக்கிறது. ஆனால் அந்த பனைகளை வெட்டுதல் மட்டும் கூடாது.
‘‘விடியக்காலையில
வெறும் வயித்துல ரெண்டு செம்பு பதனியக் குடிங்க, அது உடம்புக்கு அத்தனை நல்லது. டாக்டர்களே இதைச் சொல்றாங்க. பனம்பழம் நுரையீரலுக்கு நல்லது. பனை தர்ற இன்னொரு அயிட்டம் பனங்கிழங்கு. உணவுப் பொருளா மட்டுமில்லாம நார், ஓலை, மரம்னு பனையோட ஒவ்வொரு பகுதியும் நமக்குப் பயன் தர்றதுதான். பதினி சீசன் முடிஞ்சதும் கருப்பட்டி காய்ச்சறது, நார் கிழிச்சி விக்கறதுன்னு கொஞ்சம் வேலைகள் இருக்கும். அதுல எல்லாம் பெரிசா வருமானம் இருக்காது. இதனாலயே சமீபமா நிறைய பேர் தொழிலை விட்டுட்டு கூலி வேலைகளுக்குக் கிளம்பிட்டாங்க. எங்க கிராமத்துல வீட்டுக்கு ஒருத்தர் பனையேறிட்டிருந்தாங்க எண்பதுகள்ல. இன்னிக்கு பதினைஞ்சு பேர்கிட்ட இருக்கோம். தொழில் நசிஞ்சிட்டே போகுதுங்கிறதுக்கு இதுதான் அடையாளம். அரசாங்கத்துகிட்ட எவ்வளவோ கோரிக்கைகள் வச்சாச்சு. கள் இறக்க அனுமதிச்சாலே இந்தத் தொழிலைக் காப்பாத்திடலாம். ஆனா அதுக்கான அனுமதி கிடைக்க மாட்டேங்குது. கள் இறக்கி நாங்களா கடை போடணும்னு சொல்லலை. அரசே கொள்முதல் பண்ணியாச்சும் விக்கலாம்ல. கெமிக்கல் போட்டு தயாரிக்கப்படற வெளிநாட்டு மதுபானங்களை வாங்கிக் குடிக்கச் சொல்ற அரசு இதைப் பண்றதுக்கு என்ன? பண்ணுனா தமிழ்நாடு முழுக்க பனைகளை நம்பி வசிக்கிற லட்சக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியா வாழ முடியும்’’ என்கிறார் பனைத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராயப்பன்.
கரும்புத்
தொழிலில் சர்க்கரைக்கு மானியம் தருவது போல் கருப்பட்டிக்கும் தரவேண்டும் என்பதும் இவர்களின் இன்னொரு கோரிக்கையாக இருக்கிறது. ‘‘பனங்காடுகள்னாலே நரிகளும் ஓநாய்களும் நிறைய நடமாடும். பொஞ்சாதி, பச்சப் புள்ளகளை வச்சுக்கிட்டு இங்கன குடும்பம் நடத்தறது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் சோறு போடற சாமியாத்தான் நாங்க பனைகளைப் பார்க்குறோம். பனைத் தொழிலாளர்கள்ல கிறிஸ்தவர்களும் நிறையப் பேர் இருக்காங்க. ஆனாலும் ஒரு சீசன்ல முதல் பதனி இறக்கறப்ப இந்துக்கள் கும்பிடற மாதிரியே மரத்துக்குப் பூஜையெல்லாம் பண்ணித்தான் பனையில ஏற கால் வைப்பாங்க
அவங்களும். அந்தளவு பனைகளை நாங்க நேசிக்கறப்ப அதுக சூழ்ந்திருக்கும் காடுகள் எங்களைக் கைவிடுமா என்ன?’’ என்கிறார் ராயப்பன்.
நன்றி
- குங்குமம்
No comments:
Post a Comment