திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது.
அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு
சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.
குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி.
போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும்
வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி
உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள்,
என்றார், பரமார்த்தர்.
அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர்.
குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன்.
குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல்
ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால்
எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து
வருகிறோம், என்றான், முட்டாள்.
சரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே
போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும்,
நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே
இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத்
திலகம் இட்டு அனுப்பினார், குரு.
படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.
நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி.
செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான்.
தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார்.
ஓகோ! மன்னருக்கு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி.
தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார்.
அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான்.
அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி.
No comments:
Post a Comment