உயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்!


செய்தித்தாள்களில் அடிக்கடி தென்படும் செய்திகளில் ஒன்று போலி மருந்துகள் பிடிபடுவது.  உயிர்காக்கும் மருந்துகளே உடலைப் பதம்பார்க்கும் கொடுமைகள் இவற்றால்தான் நடைபெறுகின்றன. 

வியாபாரிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் மக்களும் மருந்துகளை வாங்குவதிலும்,

அவற்றைப் பாதுகாப்பதிலும் அலட்சியம் காட்டுகின்றனர்; அல்லது அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்னைகள் குறித்தும்  தீர்வுகள் குறித்தும் விளக்குகிறார் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் சிவபாலன்.    


பில் கட்டாயம் 
போலியான மருந்துகளையோ, காலாவதியான மருந்துகளையோ நாம் வாங்கியிருந்தால், அதற்கான முதல் ஆதாரமே அந்த பில்தான். 

ஒரு மருந்தகத்தில் பில் தருகிறார்கள் என்றால் அவர்கள் முறையான லைசென்ஸ் பெற்றவர்கள் என்பதும், மருந்து அவர்களிடம்தான் வாங்கப்பட்டது என்பதும் உறுதியாகும். அனுமதிக்கப்பட்ட மருந்து உற்பத்தியாளர், அனுமதிக்கப்பட்ட முகவர், அனுமதிக்கப்பட்ட கடைக்காரர் என இந்தச் சங்கிலியில்தான் மருந்து விநியோகிக்கப்படும். இதனை உறுதிசெய்யும் மிக முக்கியமான ஆவணமே பில்தான். 

அதனால் பில் வாங்குவதைத் தவிர்க்காதீர்கள்.
அரசு சோதனைகள்
ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் மருந்து ஆய்வாளர்கள் மூலம் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், மருந்துக் கிடங்குகள் என எல்லா இடங்களிலும் சோதனை செய்யப்படும். குறைந்தது ஏழு மாதிரிகளாவது சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்குச் சோதனைகளுக்கு அனுப்பப்படும்.

 ஒருவேளை போலியான மருந்துகள், தரமற்ற மருந்துகள், முறையற்ற சேமிப்பு வசதிகள் போன்றவை இருப்பின், சோதனைகளுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசு சார்பில் போலி மருந்துகளைக் கண்டறிய மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் சோதனை. நுகர்வோருக்கு நாங்கள் சொல்வதெல்லாம் முறையாக பில் செலுத்தி வாங்குங்கள் என்பது மட்டும்தான். 


பார்த்து வாங்கவேண்டிய விஷயங்கள்
ஒவ்வொரு மருந்திலும் அதன் வேதியியல் பெயர், பிராண்ட் பெயர், பேட்ச் எண், தயாரிக்கப்பட்ட தேதி, தயாரித்த நிறுவனத்தின் லைசென்ஸ் எண் மற்றும் தெளிவான முகவரி, எந்த வெப்பநிலையில் மருந்தைப் பராமரிக்க வேண்டும் போன்ற விவரங்கள் மருந்தின் உறையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 

இவையனைத்துமே சட்டப்படி இருக்கவேண்டிய விஷயங்கள். இவை தவிர, எந்த மருந்தை மருத்துவரின் அறிவுரைப்படி உட்கொள்ள வேண்டும், மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உட்கொள்ள வேண்டும் போன்ற விவரங்களும் குறியீடுகள் மூலம் அச்சிடப்பட்டிருக்கும்.


போலியான சிரப்கள், போலியான மாத்திரைகள் போன்றவற்றை அவற்றின் பேக்கிங் முறையிலேயே அடையாளம் கண்டுவிடலாம். லேபிள், பேக்கிங் தரம், நிறுவனத்தின் பெயர், லோகோ, பாட்டில்களின் தரம் போன்றவற்றிலேயே வித்தியாசம் தெரியும். நுகர்வோர் எளிதாகக் கண்டறிந்துவிடலாம். 

போலியான சிரப்கள் இப்படித்தான் விற்கப்பட்டன. அவற்றைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.



எக்ஸ்பைரி தேதி சிக்கல்கள்
1940-ம் ஆண்டின் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின்படி, ஒவ்வொரு மருந்திற்கும் ஒவ்வொரு காலாவதி தேதி உண்டு. 

இதன்படிதான் மருந்துகளுக்கு அதன் காலாவதி தேதி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை, மருந்து உற்பத்தியாளர் அனுமதிக்கப்பட்ட காலாவதி தேதியைவிடவும் தன் மருந்து அதிகநாள்கள் நீடிக்கும் என நினைத்தால், அதற்கான சோதனைகளை செய்துகாட்டி, சிறப்பு அனுமதியும் பெற்றுக்கொள்ளலாம். இதன்படி, அந்த மருந்திற்கான காலாவதி தேதி நீட்டிக்கப்படும். 
காலாவதி தேதியில் ஏதேனும் குழப்பங்கள், மருந்துகளின் தரத்தில் சந்தேகம் போன்றவை இருந்தால், அந்தந்த மாவட்ட மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வாளர்களின் விவரங்கள் http://www.drugscontrol.tn.gov.inஇணையதளத்தில் இருக்கின்றன.  

நுகர்வோரிடம் இருக்கும் மருந்துகள் காலாவதியாகிவிட்டால் அதனை அவர்களே அழித்துவிடவேண்டும்.  கடைகளில் காலாவதியான மருந்துகள் இருப்பின், அதனை உற்பத்தியாளர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். அவர்கள் அவற்றை அழித்துவிடுவார்கள். இந்த விதிகள் அனைத்தும் அலோபதி மருந்துகளுக்கு மட்டுமே. சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கு இவை பொருந்தாது. 



வெப்பநிலை
மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டியது மருந்துக் கடைகளின் கடமை. வீட்டிற்கு வாங்கிவந்த பிறகு, அதனைப் பராமரிப்பது நுகர்வோரின் பொறுப்புதான். மருந்துகளைக் கையாள்வதில், மூன்றுநிலைகள் பின்பற்றப்படுகின்றன. 

* Store in a Cold Place – அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் வரை

* Store in a Cool Place – 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை

* Store in a particular temperature – குறிப்பிட்ட வெப்பநிலை

முதல்வகையில் பெரும்பாலும் ஊசி மருந்துகளே இருக்கும். இவற்றை யாரும் வாங்கிவர மாட்டார்கள். எனவே பிரச்னை இல்லை. மாத்திரைகளில் 95 சதவிகிதம் ‘Cool Place’-ல்தான் வரும். இவற்றைக் குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்துக்கொள்ளலாம். 

அல்லது சராசரி வெப்பநிலையிலும் வைக்கலாம். இவை தவிர சில மருந்துகளை மட்டுமே சரியாகக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். இதுகுறித்த விவரங்கள் மருந்தின் லேபிளிலேயே இருக்கும்.


ஆன்லைனில் மருந்துகள் வாங்கலாமா?
மருந்துகள் விற்பதற்காக நிறைய இணைய தளங்கள் தற்போது இருக்கின்றன. சட்டத்தை மீறி மருந்து விற்றதால் அவற்றில் பலவற்றின் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். ஒரு மருத்துவர் பரிந்துரைத்து, அது ஒரு தேர்ந்த மருந்தாளுநர் மூலம் விநியோகிக்கப்படுவதே சட்டப்படி மருந்து வாங்குவதற்கான வழிமுறை. ஆன்லைனில்  வாங்கும்போது மருந்துகளின் உண்மைத்தன்மை, எப்படிப் பாதுகாப்பது, எப்படி உட்கொள்வது போன்றவை தெரியாது.

 இணைய தளங்களில் நுகர்வோர் மருந்துகளை ஆர்டர் செய்ததும், அது ஒரு டெலிவரி பாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தன்னிச்சையாக மருந்துகளை ஆன்லைனில் விற்பது சட்டப்படி தவறு. எனவே, மருந்துக் கடைகளோ அல்லது இணையதளமோ, மருத்துவரின் உரிய அறிவுரை இன்றி, பில் இன்றி எந்த மருந்துகளையும் வாங்கவேண்டாம். இதன் மூலம் நுகர்வோர் போலிகளைத் தவிர்த்துவிடலாம்.”

No comments:

Post a Comment