இதுதாங்க கிறிஸ்மஸ்!



 இறைமகன் இயேசு பிறந்தநாளே கிறிஸ்மஸ் பண்டிகை. கன்னி மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் மரியா முன்பு கபிரியேல் தூதர் தோன்றி, அருள் மிகப் பெற்ற மரியாவே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்று கூறினார். இந்த வாழ்த்தை கேட்டு மரியா கலங்கி நின்றார். உடனே வானதூதர், மரியாவை பார்த்துமரியாவே அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர், இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என பெயரிடுவீர், அவர் உன்னத கடவுளின் மகனாவார். அவர் பெரியவராய் இருப்பார். அவரது ஆட்சிக்கு முடிவே இராதுஎன்று வானதூதர் கூறினார்.

உடனே மரியா, இது எப்படி நிகழும். நான் கன்னி ஆயிற்றே என்றார். அதற்கு வானதூதர், தூய ஆவி உம் மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். பின்னர் மரியா, நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார். பின்னர் வனதூதர் திடீரென அவரை விட்டு மறைந்து விட்டார்.

இந்த நிலையில், கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருப்பதை அறிந்த யோசேப்பு நேர்மையானவரும் நீதிமானுமாய் இருந்ததால் மரியாவை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல் மறைவாக விலக்கிட நினைத்தார். அவர் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கையில், வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி, தாவீதின் மகனே, மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்சவேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான், ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்பார் என்றார்.
இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார்என ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முன் இருக்கிறார் என பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தூதர் பணித்தவாறே மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அகுஸ்து சீசர், மக்கள் தொகையை கணக்கிட கட்டளையிட தம் பெயரை பதிவு செய்ய யோசேப்பு, மரியாயோடு யூதேயாவிலுள்ள பெத்லேகம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அந்நேரம் மரியாவுக்கு பேறுகாலம் வர, விடுதியில் இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழுவத்தில் தெய்வமகன் பிறந்தார். குழந்தையை துணிகளால் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது இடையர்கள் வயல்வெளியில் தங்கியருக்கும் போது தூதர் தோன்றி அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி ஒன்று, இன்று ஆண்டவராகிய மெசியா தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என கூறினார். பின் இடையர்கள் மரியா, யோசேப்பு குழந்தையும் கண்டார்கள். பின் கடவுளை போற்றி புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

எட்டாம் நாள் குழந்தைக்கு தடை செய்த போது கடவுளின் தூதர் அறிவித்தபடி இயேசு எனப் பெயரிட்டார்கள். உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்க மீட்பர் இயேசு பிறந்தார். இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்மஸ் பெரு விழா உலகம் முழுவதும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் மரம் : வரலாறு தரும் தகவல்
 உலகில் இன்றைக்குகிறிஸ்துமஸ்பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள்கிறிஸ்மஸ் மரம்இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி  இந்தப் பழக்கம் உருவானது?
அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் இதன்பாற்பட்டதுதானோ!

நதிமூலம்:
கிறிஸ்மஸ் மரம்ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர். கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.
15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம்ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியை நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்தகனிமரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.

முதல் மரம்:
கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல்கிறிஸ்மஸ் மரம்வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஆஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டதுஇரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக  இந்த மரத்தை அளித்தனர். இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

அறுவடைத் திருநாள்:
இங்கிலாந்தில் பாகான் என்ற இனத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில் திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும் இடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக் மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள் அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.
ரோமானியர்கள், சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள்  இனிப்பு வகைகளை வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லதுபர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.

உயிர்த்தெழுந்தது:
அது சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக் கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டு போறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!
ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் St.போனி ஃபேஸ் (St.Boniface) என்பார்தான்  இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார். ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காகஓக்மரங்களை வெட்டி அழித்து வந்தனர். மின்சாரம் இல்லாத அந்நாட்களில் குளிரை விரட்டஓக்உருட்டுக் கட்டைகள்தான் வீட்டு “Fire Place”ல் பயன்படுத்திவந்தனர்.

குடும்பங்களை வெதுவெதுப்பாக, கதகதப்பாக வைத்திருப்பதில் மையப் பொருளாகஓக்திகழ்ந்தது. இப்படியே மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின் முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒருஓக்மரம் வெட்டப்பட்டால் அந்த  இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக் கன்று துளிர் விட வேண்டும். எப்படி, மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க வேண்டும், என்று புனிதர் போனிஃபேஸ் வேண்டுகோள் விடுத்தார்இதன் பிறகு ஜெர்மானியர்கள் ஒருஓக்மரம் வெட்டினால் ஒருஓக்மரம் அல்லது ஒரு ‘•பிர்மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக  இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில்ஓக்மரங்களையோ ‘•பிர்மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது.


உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது.

நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மனிதர்களுடையை தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார்; மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தவறுகளையும் மன்னிக்க மாட்டார்.

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது (வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு போதும்.

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.

ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியால் அறியப்படும்.

விவிலியம், மத்தேயு, அதிகாரம் 5 முதல் 12.


கிறிஸ்மஸ் தாத்தாவின் கதை

கிறிஸ்மஸ் உலகெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் ஒரு அற்புதமான பண்டிகையாகும். ஏசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாக திகழ்வது சான்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவும் அவரின் பரிசு பொருட்களும்தான்.

சான்டா க்ளாஸ் என்னும் சொல் செயின்ட் நிகோலாஸ் என்னும் பெயரை தழுவி நிறுவப்பட்டது.செயின்ட் நிகோலாஸ் என்பவர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க கிறிஸ்துவ பாதிரியாவார். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவரின் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. அது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதெல்லாம் சான்டா க்ளாஸ் ஒவ்வொருவர் வீட்டிற்கும் வருகைதந்து அனைவருக்கும், குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பார் என்பது தான். பல்லாயிரமாண்டுகளாக கிறிஸ்துவர்கள் நம்பும் பாரம்பரியமாக கருதப்படும் இந்த வழக்கத்தை நடைமுறைபடுத்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி இனிப்புகள் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

சிவப்பு மற்றும் வெள்ளை உடைகள், வெள்ளை நிற தாடி, பருமனான உடல்வாகு என கிறிஸ்மஸ் தாத்தாவை நினைக்கும்போதெல்லாம், உண்மையான மகிழ்ச்சி என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னும் உண்மையை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

எட்டு மான்கள் பனியில் சறுக்கும் வாகனத்தை இழுக்க, அதில் ஒய்யாரமாய் அமர்ந்துவரும் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள்தான் அனைவரது வீட்டிற்கும் வருகை தருவார்.

பரிசு பொருட்கள், இனிப்பு வகைகள், சுவை மிகுந்த கிறிஸ்மஸ் கேக்குகள், மனமெங்கும் மகிழ்ச்சி என கிறிஸ்மஸ் தாத்தாவின் வருகைக்கு இன்றிரவு காத்திருங்கள்.......

இதுதாங்க நம்ம கிறிஸ்மஸ்!

xmas tree with family கிறிஸ்மஸ் என்று சொல்லும்போது சிறுவயது ஞாபகம் வருது. அந்த வயதில் கிறிஸ்மஸ் என்றால், புதுத் துணிமணிகள், தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள், அதுவும் 'கிறிஸ்மஸ் தாத்தா' இரவில் நாம் தூங்கும் போது நமக்கு வேண்டிய பரிசுகளை கொண்டு வந்து தலையணைக்கு பக்கத்தில் அல்லது கிறிஸ்மஸ் மரத்திற்கு அடியில் இருக்கும்படி செய்வார். அதில் நம் பெயர் எழுதியிருக்கும். அதை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இதையே எங்கள் பிள்ளைகளிடமும் சொல்வேன். "கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட என்ன பரிசு வேண்டும் என்று சொல்லுங்க, மனசுக்குள் அல்ல சத்தமாக சொல்லணும்" என்பேன். (அப்பத்தானே நாங்க அதை முதலிலேயே வாங்கி, மறைச்சு வைத்து கிறிஸ்மஸ் இரவில் கிறிஸ்மஸ் தாத்தா வைக்கிற மாதிரி பிள்ளைகளுக்கு அருகில் வைக்கலாம் அல்லவா? பிள்ளைகள் வளர்ந்த பிறகு இதை அவர்கள் கண்டுபிடிச்சப்போது எவ்வளவு சிரிப்பு; மகிழ்ச்சி.)

இன்றைக்கும் நாம் சின்ன பிள்ளைகள் போல இருக்கிறோம். கிறிஸ்மஸ் என்றால்- புதுத்துணி, தின்பண்டங்கள், சாப்பாடு, கொண்டட்டம் இதுதான் கிறிஸ்மஸ் என்று நினைக்கிறோம். இதெல்லாம் தேவை இல்லையா? தேவை தான். ஆனால் அது மட்டுமே கிறிஸ்மஸ் அல்ல. கிறிஸ்து உங்களுக்காக - எனக்காக பிறந்தார் என்று நம்புவதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதன் முழுமையான 'அர்த்தம்' நமக்கு புரியவும் இல்லை, புரிந்து கொள்ள முயல்வது இல்லை. அவர் நமக்காக பிறந்தார் என்பதை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்கிறோம். ஏன் அவர் நமக்காக பிறக்க வேண்டும்? நாம் அவ்வளவு நல்லவங்களா? இல்லையே! நம்மிடம் நல்ல குணங்களும் உண்டு; கெட்ட குணங்களும் உண்டு. அப்படி இருந்தும் அவர் நம்மை ஏற்றுக் கொண்டார் என்றால் அவர் எவ்வளவு நல்லவர்; இனியவர் என்பது நமக்கு புரிகிறதா? "ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்" திபா 34:8 என்று ஆவியானவர் அழைப்பு விடுக்கிறார்.

நம் நாவில் கசப்பு, இனிப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு என்று அறுசுவைகள் உண்டு: அது போல மனிதர்களிடையேயும் அந்த குணங்கள் உண்டு. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியலை. அல்லது ஏற்றுக் கொண்ட மாதிரி நடிக்கிறோம். ஏற்றுக் கொள்ளாத நாம் வஞ்சனையும் கோபமும் பொறமையும் கொண்டவர்களாக மன்னிக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களை ருசிக்க முடியலை; ருசிக்கவும் பிடிக்கலை. ஆனால் விவிலியம் என்ன சொல்கிறது தெரியுமா? (1பேதுரு2:1)"ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால் எல்லாவகையான தீமையும், வஞ்சகத்தையும், வெளிவேடம், பொறமை, அவதூறு ஆகியவற்றையும் அகற்றுங்கள்" என்று கட்டளை அல்லவா கொடுக்கிறது.

எனக்கு தெரிந்த சகோதரி ஒருவர் இருந்தார்கள். இப்போது அவர்கள் பரலோகத்தில் ஆண்டவரை ருசித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி சொல்வது என்னவென்றால் பாவற்காயை பச்சையாக சாப்பிட பிடிக்கும் என்பார். அவர் சொல்வதை கேட்டும்போது ரொம்ப ஆச்சரியமாக எனக்கு இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் இனிப்பை விட அதிக கசப்பும் காரத்தையும் காட்டுகிற மக்களிடையே வாழ்ந்த சகோதரி. அந்த மக்களை ஏற்றுக் கொண்ட அளவுக்கு அந்த மக்கள் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.

இது மாதிரி நம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களின் ருசிகளை அறிந்து ஒதுக்கிவிடாமல், ஏற்றுக் கொள்ள, பழக அது கஷ்டமான ஒன்றாக இல்லாமல் சாதாரணமானதாக மாறமுடியும். மனிதர்களை சகித்துக் கொள்ள இயேசு நமக்கு கற்று கொடுத்தார். அவருக்கும் துரோகம் என்றால் என்ன, அவமானம் என்றால் என்ன? என்று தெரியும். புளிமாவு போல் நடிக்கிற மக்களை தெரியும். இழிநிலை அடைந்த அவர் அதை பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் தனக்கு அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு ஏற்றுக் கொண்டார். அந்த சிலுவை அவர் வாழ்ந்த 33வருடமும், ஒவ்வொரு நாளும் அவர் சுமந்த சிலுவை. அந்த சிலுவைக்கு சுகம் உண்டு எனபதால் தான் அனுதினமும் இந்த சிலுவையை சுமந்து கொண்டு பின்பற்றி வரச் சொன்னார். கசப்புகளையும் காரமான மனிதர்களையும் நாம் சந்திக்கும்போது சோர்ந்து போக கூடாது. இனிப்பு என்றும் கசப்பு என்றும் ஒதுக்கவேண்டாம். எல்லாவற்றையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள பழகுவோம். அவமானத்தையோ, பிறரின் அசட்டைதனத்தையோ கேலியையோ பொருட்படுத்தாத இயேசுவை எண்ணி பாருங்கள். அப்போர் நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போகமாட்டீர்கள் என்று ஆவியானவர் உறுதியாக நம்மிடம் சொல்கிறார்.(எபி12:2,3)

ஆண்டவரை உதவிக்கு கூவி அழைக்கும் போது தாங்கி கொள்ள பெலன் தருவார். திருப்பாடல்க்ள 38ல் ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்து பாருங்கள் என்று சொன்னபோது, அவரை நோக்கி பார்த்போர் அவமானத்திற்கு உள்ளாவதில்லை என்று தொடர்ந்து இந்த ஏழை கூவி அழைத்தான் .ஆண்டவர் அவனுக்கு செவி சாய்த்தார். அவர் எல்லா நெருக்கடியினின்று அவரை விடுவித்து காத்தார் என்று வரிசையாக ஐந்து காரியங்களை சொல்கிறார். (தி பா 38:5-8)


madonnaஆகவே எனக்காக கிறிஸ்து பிறந்தநாளில் நாமும் மற்றவர்களுக்காக மறுபடி பிறப்போம். மற்றவர்களை சகித்துக் கொள்ள, உதவி செய்ய நல்ல மனதைக் கேட்போம். அட...போங்க ஜாலியாக இருக்கிறதை விட்டுவிட்டு ..... இதெல்லாம் நடக்கிற காரியமா? என்கிறீர்களா? அப்படின்னா உங்களுக்கு இந்த கிறிஸ்மஸ் எப்போதும் போலதான் இருக்கும். புதியதாய் பிறந்த நாம் இயேசுவோடு புது வருடத்திற்குள் அடியெடுத்து வைக்க ஆயத்தமா? எத்தனை தடவை தோற்று போனலும் மறுபடி எழுந்து நிற்க ஆண்டவர் பெலன் தருவார். அன்பைத்தருவார். இதுதாங்க கிறிஸ்மஸ்!. புதிதாய் பிறக்க - மற்றவர்களுக்காக பிறக்க ஆயத்தமா? உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! இயேசு நமக்காக பிறந்தார் -நாமும் பிறருக்காகப் பிறக்கவேண்டும். இதுதாங்க நம்ம கிறிஸ்மஸ்.

No comments:

Post a Comment