முயலும்
ஆமையும் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியொன்றில் ஆமை
ஜெயித்ததாக ஒரு பழைய நீதிக்கதையுண்டு.
'ஒருவர் திறமையும் தகுதியும் உள்ளவராய் இருந்தாலும் அவருடைய மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும்
சுயபெருமிதமும் அவரைத் தோல்விக்கு இட்டுச்
செல்லக்கூடும்' என்கிற நீதியை வலியுறுத்தும்
கதை. ஆனால் யதார்த்தத்தில் ஆமைகள்
ஜெயிக்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியே.
பொதுவாகவே இந்திய நீதித்துறை இயங்கி
வருவதில் உள்ள மெத்தனமும் அலட்சியமும்
பற்றி நீண்ட காலமாகவே பல
சம்பவங்களும் விமர்சனங்களும் உள்ளன. 'தாத்தா போட்ட
வழக்கு பேரன் காலத்தில் கூட
முடியுமா என்பது கேள்விக்குறிதான்' என்று
இதைப் பற்றி பேச்சுவழக்கில் நகைச்சுவையாக
குறிப்பிடப்பட்டாலும் சில வழக்குகள் அவ்வாறே
நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. வாரணாசியில்
உள்ள தோஷிபுராவில் இரண்டு ஏக்கர் நிலத்திற்காக
1878-ல் தொடரப்பட்ட, இன்னமும் நிலுவையில் இருக்கும் வழக்கே 'இந்தியாவின் மிக
நீண்டகால நிலுவையிலுள்ள வழக்காக' கூறப்படுகிறது.
ஒரு நபரின் செல்வாக்கு, புகழ்,
பணபலம் ஆகியவற்றைப் பொறுத்துதான் சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவாகவோ அல்லது நிதானமாகவோ விசாரிக்கப்பட்டு
அதற்கேற்ப தீர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதை செய்தித்தாள்களின் மூலம்
தினம் தினம் வாசித்து உணர்கிறோம்.
தனக்கான நீதியை வேண்டிய நிற்கும்
ஒருவருக்கு சமூகத்தின்
இன்ன பிற நிறுவனங்கள் கைவிட்டாலும்,
அந்த சராசரி நபரின் கடைசி
புகலிடமாகவும் அடைக்கலமாகவும் நீதித்துறை இருப்பதாக கருதப்படுகிறது. 'ஆமையும் ஒரு நாள்
வெல்லக்கூடும் என்கிற நீதிக்கதையைப் போலவே
'நீதியும் என்றாவது ஒருநாள் இறுதியில் வெல்லும்'
என்கிற அறம் சார்ந்த இறுதி
நம்பிக்கையில்தான் இச்சமூகம் சற்றேனும் ஆசுவாசமாக இயங்குகிறது. அதே சமயத்தில் 'தாமதிக்கப்பட்ட
நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே'
என்கிற மேற்கோளையும் இங்கு நினைவில் கூற
வேண்டும். இந்திய தேசமெங்கிலும் சுமார்
மூன்று கோடி வழக்குகள் தீர்க்கப்படாமல்
நிலுவையில் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
***
சைத்தன்ய
தம்ஹனே இயக்கியிருக்கும் மராத்தி திரைப்படமான 'கோர்ட்',
இந்திய நீதித்துறை இயங்குவதில் மெத்தனங்களையும் ஓர் எளிய வழக்கு
கூட நீண்ட காலத்திற்கு அநாவசியமான
நிதானத்துடன் கையாளப்படுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும்
அந்த வழக்கை கையாள்பவர்களிடம் அந்த
வழக்கோடு உள்ள உளவியல் ரீதியான
முரண்களைப் பற்றியும் இந்த நிதானத்தினால் வழக்கில்
குற்றஞ்சாட்டப்படுபவர்கள் காரணமேயின்றி எதிர்கொள்ள வேண்டிய துயரங்களையும் பற்றி
உரையாடுகிறது. இந்தியாவில் உருவாகும் வழக்கமான கோர்ட் டிராமா திரைப்படங்களைப்
போல ''யுவர் ஆனர்" என்று
ஆவேசப்படும் உரத்த
குரலில் அல்லாமலும் தேய்வழக்கு
காட்சிகள், செயற்கையாகத் திணிப்புகள் போன்றவை அல்லாமலும் ஓர் ஆவணப்பட உருவாக்கத்தின்
சாயலில் மிக இயல்பான காட்சிகளுடன்
இத்திரைப்படம்பதிவாகியுள்ளது.
ஆஸ்கர் விருதிற்கான 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட
பிரிவில்' இந்தியாவின்
பிரநிதித்துவ திரைப்படமாக இது தேர்வு செய்யப்பட்டிருப்பது
இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறது.
திரைப்படத்தின்
துவக்கக் காட்சிகள் இவை. சுமார் 60 வயதுள்ள
நாராயண் காம்ப்ளே, குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித் தந்து
முடித்து விட்டு எங்கோ புறப்படுகிறார்.
பேருந்தில் பயணிக்கும் போது எவரிடமோ 'அங்குதான்
வந்து கொண்டிருக்கிறேன்' என்கிறார். தன்னுடைய பென்ஷன் தொடர்பாகவோ அல்லது
சமவயது நண்பரைப் பார்ப்பதற்காகவோ அவர் சென்று கொண்டிருக்கிறார்
என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
போதே பேருந்தில் இருந்து இறங்கி வீதியோரம்
அமைக்கப்பட்டிருக்கும் ஒரு முற்போக்கு இயக்க
செயற்பாட்டு மேடையில் ஏறி உரத்த குரலில்
ஆவேசத்தோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்புணர்வு தொடர்பான பாடலைப் பாடுகிறார். அவரின்
எளிய தோற்றம் சட்டென்று மாறி அவருடைய ஆகிருதி
பிரம்மாண்டமடைவதை நம்மால் காண முடிகிறது.
பாடலின் இறுதியில் காவல்துறையினர் அவரை சூழ்ந்து கொள்கின்றார்கள்.
அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அடுத்த
காட்சியின் மூலம் தெரிந்து கொள்ள
முடிகிறது.
அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் வழக்கானது இதுதான். சாலையிலுள்ள
சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும்
மும்பை மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளியான வாசுதேவ்
பவார் என்பவர் பணியின் போது
விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பால் இறந்து விடுகிறார். ஆனால்
அவர் இறந்தது விபத்தினால் அல்ல,
நாராயண் காம்ப்ளே பாடிய உணர்ச்சிகரமான பாடலின்
செல்வாக்கினால் தற்கொலை
செய்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டு கிளப்பப்படுகிறது. 'கழிவுகளை
சுத்தம் செய்யும் தொழிலாளர்களே, உங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக்
கொள்ள தற்கொலை ஓர் உன்னதமான வழி'
என்கிற பொருள் வரும்படியான பாடல்
வரி அவர் பாடியதில் இருந்தது.
எனவே வாசுதேவ் பவார் தற்கொலைக்கு நாராயணன்
காம்ப்ளே காரணமாக இருந்தார் என்பதுதான்
வழக்கு.
திரைப்படத்தின்
தலைப்பிற்கு ஏற்றபடி இத்திரைப்படத்தின்
பெரும்பாலான காட்சிகள் அமர்வு நீதிமன்ற சூழலில்
நடைபெறும் வழக்கின் விசாரணைக் காட்சிகளாக உள்ளன. அரசாங்க அலுவலகத்தின்
சோம்பலான சூழல், ஒரு
சில சுருக்கமான, சம்பிதாயமான கேள்விகளில் உடனே முடிக்கப்பட்டு அடுத்த
விசாரணைக்கு ஒத்தி
வைக்கப்படும் நடைமுறைகள், நீதித்துறையின் பிரத்யேகமான மெத்தனங்கள் போன்றவை ஏறத்தாழ அதே ரியல்
டைம் கால அளவோடு நிதானமாக விவரிக்கப்படுகின்றன. பார்வையாளர்களாகிய நமக்கே இந்த வழக்கு
எத்தனை அற்பமானது என்பது எளிதில் விளங்கும்
போது நீதித்துறையானது
தனது வழக்கமான நடைமுறைகள் மூலம் இதை நத்தை
வேகத்தில் நகர்த்திச் செல்லும் அந்த அபத்தத்தை நம்மால்
எளிதில் உணர முடிகிறது.
அரசு வழக்கறிஞர் தம்முடைய தரப்பை நியாயப்படுத்துவதற்காக நாராயண் காம்ப்ளேவை
அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாதி போலவும்
அவர் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள்
பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் தேச இறையாண்மைக்கே ஆபத்து
என்றெல்லாம் வாதாடுகிறார். 'அவை ஒரு குறிப்பிட்ட
சமூகத்தின் வரலாற்றைச் சொல்லும் சாதாரணமான, சென்ற நூற்றாண்டில் தடை
செய்யப்பட்ட புத்தகங்கள்' என்று நாராயண் காம்ப்ளேவிற்காக
வாதாடும் வழக்கறிஞர் என்று மன்றாடுகிறார். இதன்
மூலம் சமகாலத்திற்கு ஒவ்வாத விக்டோரியன் காலத்து
சட்டப்பிரிவுகளையும் நடைமுறைகளையும் நீதித்துறை இன்னமும் பிடிவாதமாய் பின்பற்றிக் கொண்டிருக்கும் அபத்தங்கள் காட்சிகளாக விரிவதை நம்மால் உணர
முடிகிறது.
நீதிமன்றக்
காட்சிகளைத் தவிர்த்து அரசு தரப்பு பெண்
வழக்கறிஞர், நாராயணன் காம்ப்ளே தரப்பில் வாதாடும் வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரிக்கும்
நீதிபதி ஆகியோர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பான சம்பவங்களும்
இடையில் காண்பிக்கப்படுகின்றன. இவை மையப்பிரதிக்கு தொடர்பில்லாததாக
உள்ளனவே என்று ஒரு சிலர்
நினைக்கக்கூடும். அவ்வாறில்லை. கல்வியறிவு பெற்ற நடுத்தரவர்க்கமானது தங்கள்
பாடப்புத்தகங்களையும் பணிபுரியும் துறை சார்ந்த சடங்குகளையும்
தாண்டி எவ்வித அரசியல் விழிப்புணர்வோ,
சமூக நீதி அவலங்களையோ அறியாத
அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெற்று
நபர்களாக இயங்குகிறார்கள் என்பதை இந்தக் காட்சிகள்
உணர்த்துகின்றன.
அரசு தரப்பில் வாதாடும் பெண் வழக்கறிஞர் மற்றும்
நீதிபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான காட்சிகள், சராசரியான பாமர நபர்களின் வாழ்வு
முறையின் அதே பொதுப்புத்தியோடு எவ்வித
வித்தியாசமும் இன்றி இயங்குகின்றன. பெண்
வழக்கறிஞர் வீடு திரும்பும் வழியில்
சக தோழியிடம் அவருடைய புடவை பற்றி
விசாரிக்கிறார். வீடு சென்றதும் இன்னொரு
பெண்மணியுடன் தொலைபேசியில் குடும்ப வம்புகள் பேசிக்
கொண்டே சமைக்கிறார். பணிகள் முடிந்த இரவு
நேரத்தில் மெல்லிய குரலில் ஒரு
பாட்டை உல்லாசமாக முனகிய படியே வழக்கின்
குறிப்புகளை எழுதுகிறார்.
அந்தக்
குடும்பம் உணவருந்தும் ஒரு காட்சியே ஓர்
இந்திய குடும்பத்தின் பொதுச்சித்திரத்தை கச்சிதமாக விளக்கி விடுகிறது. அந்த
வீட்டின் குடும்பத்தலைவர் நாற்காலியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். மகன் கால் மீது
கால் போட்ட படி கட்டிலில்
படுத்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மகளோ தரையில்
அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறாள். சிறுவயதிலிருந்து ஆண் - பெண் பாகுபாட்டோடும்
அதன் ஏற்றத் தாழ்வோடும் வளர்க்கப்படும்
இந்த தனிநபர்கள் தங்களின் பால் சார்ந்த அடையாளங்களின்
எல்லைக்குள் மாத்திரமே உருவாகி சமூகத்திற்குள் வருகிறார்கள்.
எனவே ஆண்-பெண் தொடர்பான
சிக்கல்களும் வன்முறைகளும் ஆண்டாண்டு காலமாக அதன் முரண்களோடு
அப்படியே நீடித்து நிலைக்கின்றன.
பெண் வழக்கறிஞரின் குடும்பம் பொழுதுபோக்கிற்காக ஒரு மராத்தி நாடகத்திற்கு
செல்கிறது. அது நடுத்தர வர்க்க
நபர்களுக்காக உருவாக்கப்பட்ட அசட்டுத்தனமான நகைச்சுவை நாடகம். அந்த நாடகத்தில்,
சமூகத்தின் அடித்தட்டு நபர் ஒருவரை 'வந்தேறிகள்'
என்கிற பொருளில் இனவெறியுடன் கிண்டலடிக்கும் வசனங்கள் உள்ளன. அதைக் கேட்டுஅந்தச்
சபை எவ்வித கூச்சமுமின்றி சிரித்து
மகிழ்கின்றது. சமூகத்தில் நிலவும் சாதி,மத,
வர்க்கம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளின்
கொடுமைகள், அதன் அவலங்கள், அதன்
அரசியல் சரிநிலைகள் பற்றிய எவ்வித விழிப்புணர்வுமின்றி
தங்களின் இயந்திரக் கூடுகளுக்குள் இந்த சராசரி நபர்கள்
வாழும் பொதுப்புத்தியை இந்தக் காட்சிகள் அடையாளம்
காட்டுகின்றன.
நடுத்தர
வர்க்கம் கற்கும் கல்வியானது அவர்களது
பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்யும்
நோக்கத்திற்காகவும் பொருளியல் நோக்கில் மேலே முன்னரகவும் மட்டும்
பயன்படுகிறதேயன்றி அதைத் தாண்டிய சிந்தனைகளுக்கு
அவர்கள் செல்வதேயில்லை என்கிற அவலத்தை அந்த
பெண் வழக்கறிஞரின் பாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. சட்டப் புத்தகங்களில் அச்சாகும்
பிரிவுகளையும் விதிகளையும் கிளிப்பிள்ளை போல ஒப்பித்து தன்னுடைய
தரப்பை நிறுவுவதற்குத்தான் அவர் முயல்கிறாரே ஒழிய
வழக்கிலுள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி
அவர் யோசிப்பதில்லை. சக வழக்கறிஞர்களுடன் நாராயண்
காம்ப்ளே வழக்கைப் பற்றி பேசும் போது
'அந்த நபரை அதிக வருடங்கள்
சிறையில் அடைக்கலாம், இந்த வழக்கில் இதே
முகத்தைப் பார்த்து பார்த்து சலித்துப் போகிறது' என்று அவர் சொல்வதிலிருந்து
வழக்கின் தன்மையையும் அதிலுள்ள சமூகபடிநிலை பாகுபாடுகளின் மூலம் நிகழும் கொடுமையையும்
பற்றி அவர் பிரக்ஞையில் ஏதும்
இருப்பதாகவே தெரியவில்லை. போலவே சட்டத்துறையில் பணியாற்றும்
தன்னுடைய பொறுப்புள்ள நிலையைப் பற்றியும்.
இதைப் போலவே நீதிபதியும். ஆங்கிலோ
-இந்திய பெண்மணி ஒருவரின் வழக்கை,
அவர் அணிந்திருக்கும் ஆடை நீதிமன்ற மரபிற்கு
உகந்ததாக இல்லை என்கிற காரணத்தைச்
சுட்டி அவர் விசாரிக்க மறுக்கிறார்.
அந்த நடுத்தர வயதுபெண்மணி அவருடைய
சமுகத்து கலாசாரத்தின்படிதான் உடையணிந்திருக்கிறார். அது முகஞ்சுளிக்க வைப்பதாகவும்
இல்லை. என்றாலும் தன்னுடைய
ஆசார மனமும் ஆணாதிக்க சிந்தனையும் இடும்
பிற்போக்கு சிந்தனையை நிறைவேற்றுவதற்குத்தான் நீதிபதி தனக்கு அளிக்கப்பட்டிருக்கும்
அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.
இதற்கு
மாறாக பெரியவா் நாராயண் காம்ப்ளே தரப்பில்
வாதாடும் வழக்கறிஞர் உயர்நடுத்தர வர்க்கத்து தோரணைகளுடன் இருக்கிறார். ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்குகிறார்; உயர்ரக விடுதியில் மதுவருந்துகிறார்;
கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அவரால் நிறையப் பணம் ஈட்டும்படியான
வழக்குளில் நிறைய சம்பாதிக்க முடியும்.
என்றாலும் அவருக்குள் படிந்திருக்கும் இடதுசாரி சிந்தனைகளின் காரணமாக சமூகப் போராளியான
ஏழைப் பெரியவரை ஜாமீனில் எடுக்க தொடர்ந்து மல்லுக்
கட்டுகிறார். வெவ்வேறு வர்க்கங்களில் இருக்கும் மனிதர்களிடையே உள்ள எதிர் எதிரான
விசித்திர முரணியக்கத்தை இந்தப் பாத்திரங்களின் மூலம்
உணர்ந்து கொள்ள முடிகிறது.
இவர்கள்
தங்களின் தனிப்பட்ட வாழ்வுமுறை கொண்டாட்டங்களுடன் இருப்பதில் ஏதும் பிரச்சினையில்லை. ஆனால்
அறிவுசார்ந்த துறைகள் மற்றும் சமூகத்தின்
மனச்சாட்சியாக நின்று நீதியை நிலைநாட்டும்
துறைகளில் உள்ளவர்கள் கூட சமூக அலவங்களைப்
பற்றிய சிந்தனையோ, விழிப்புணர்வோ ஏதுமல்லாமல் சுயநலம் மட்டுமே சார்ந்த
பாமர இயந்திரங்களாக இயங்கும் போது அவர்களின் மெளடீகத்தனமும் தாழ்த்தப்பட்ட
சமூகத்தினரின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத
தன்மையும் அவர்கள் சார்ந்த பணிகளிலும்
தன்னிச்சையாக எதிரொலிக்கக்கூடிய சாத்தியத்தைப் பற்றிதான் நாம் கவலை கொள்ள
வேண்டியிருக்கிறது.
***
நாராயண்
காம்ப்ளேவின் வழக்கு விசாரணை பலமுறை
ஒத்திப் போடப்பட்ட பிறகு ஒருவழியாக இறுதிக்
கட்டத்தை அடைகிறது. அவருடைய தரப்பு வழக்கறிஞர்
அதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கிறது.
இறந்த தொழிலாளி வாசுதேவ் பவாரின் பிரேத பரிசோதனை
அறிக்கையின் மூலம் அவர் சாக்கடையில்
இறங்குவதற்கு முன் பாதுகாப்பு உபகரணங்கள்
ஏதும் அணிந்திராததோடு மதுவருந்தியிருப்பதையும்
சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. (இது
போன்ற பணிகளை மேற்கொள்கிறவர்கள் ஏன்
மதுவருந்துகிறாார்கள் என்பதை விளக்கவே தேவையில்லை).
தவிரவும் அவருக்கு மரணம் நிகழ்வதற்கு
முன்பு வரை தற்கொலை நோக்கம்
ஏதும் இல்லை என்றும் அது
சார்ந்த மனஉளைச்சலோ, அதைப் பற்றிய உரையாடலையோ
குடும்பத்தாரிடம் நிகழ்த்தவில்லை என்றும் நிறுவ வேண்டியிருக்கிறது.
மேலும் சாட்சி சொல்ல வந்தவர்
'பொய் சாட்சி' என்பதை நிரூபிக்க
வேண்டியிருக்கிறது. இத்தனைக் கட்டங்களுக்குப் பிறகே பெரியவருக்கு ஜாமீன்
கிடைக்கிறது. அதிலும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பொருளாதாரத்திற்கு மீறிய
பெரிய தொகையை ஜாமீனாக கட்ட
நீதிபதி வலியுறுத்துகிறார். ஏனெனில் அரசாங்கத்தை அசெளகரியப்படுத்தும்
விஷயங்களை மீண்டும் மீண்டும் அந்தப் பெரியவர் செய்து
கொண்டேயிருக்கிறார் என்கிற காரணத்திற்காக. ஜாமீன்
தொகையை நாராயண் காம்ப்ளேவின் சார்பில்
அவருக்காக வாதாடும் வழக்கறிஞரே கட்டுகிறார்.
இந்த வழக்கில் இந்த அமர்வு நீதிமன்றமானது,
மிகப் பிரதானமாக கவனித்திருக்க
வேண்டிய விஷயம் 'மனிதக் கழிவுகளை
அகற்ற மனித சக்தியை கண்டிப்பாக
பயன்படுத்தக்கூடாது, இது மனித உரிமைக்கு
எதிரானது, பாதாள சாக்கடை சுத்தம்
செய்யும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும். இதற்கு
மாற்றாக இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்"
என்று உச்சநீதிமன்றம் இம்மாதிரியான மரணங்களை தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை உறுதியான குரலில் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
இது மனிதஉரிமை சார்ந்த மீறலும் கூட.
என்றாலும் நடைமுறையில் அது சாத்தியப்படாததற்கு அதிகார
வர்க்கத்தினருக்கு அடிமட்ட சமூகத்திலுள்ள மனித
வளத்தின் மீதான அலட்சியமும் ஆதிக்க
சாதி மனப்பான்மையும்தான்
காரணமாக இருக்கிறது. ஒருபுறம் வல்லரசாகும் நோக்கில் பல கோடி செலவில்
ராக்கெட் தயாரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம்
பல்லாண்டு காலமாக சக மனிதர்களின்
கழிவுகளைச் சுத்தம் செய்யவும் சுமந்து
செல்வதுமான நடைமுறை அவலம் இன்னமும்
நீக்கப்படாமலிருக்கும் துயரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆனால் அடிப்படையான இந்த விஷயத்தை நீதிமன்றங்களும்
அரசு நிறுவனங்களும் கவனிக்காமல் சமூகப் பேராளி பாடிய
பாடலால்தான் தூண்டப்பட்டு அந்தத் தொழிலாளி பலியானார்
என்று நிறுவ முயல்வது பிரச்சினையை
திசை திருப்புவதேயாகும். இரண்டாவதாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகமானது தங்களின் துயரங்களை
கலை, இலக்கியங்களின் எளிய மொழியின் வழியாக
வெளிப்படுத்துவது இயல்பானது. துயரத்தின் எல்லைக்கே செல்லும் போது மரணம் கூட
ஓர் ஆயுதமாக மாறுவது சமூகவியல்
நோக்கில் எதிர்பார்க்கக்கூடியதுதான். 'தற்கொலையின் மூலம் சுயமரியாதையைப் பெறுங்கள்'
என்பது எதிர்ப்பின் உச்சத்தில் அமையும் ஓர் கலகக்குரல்.
எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டியும் நவீன சமூகத்தில் கூட
அவர்களுக்கான சமூக நீதி இன்னமும்
வழங்கப்படாமலிருக்கும் போது இவ்வாறாக எழும்பும்
ஆவேசக் குரல்களை அரசு கவனித்துத்தான் ஆக
வேண்டும். அதற்கு மாறாக இவைகளை சட்டத்தின் துணை
கொண்டு அச்சுறுத்தியாவது தடை செய்ய முயல்வது
ஓர் இந்திய குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும்
அடிப்படையான கருத்துரிமையை முடக்க முயல்வதற்கு ஈடாகத்தான்
அமையும்.
கண்டிப்பான
நிபந்தனைகளின் பேரில் பெரியவர் நாராயண்
காம்ப்ளேவிற்கு ஜாமீீன் வழங்கப்பட்டாலும் அதிகாரத்தின்
அடக்குமுறைகளுக்கு பணிகிற ஆளாகிற அவர்
இல்லை. மறுநாளே தெருமுனைக் கூட்டமொன்றில்
சமூக நீதி வேண்டி ஆவேசமான
குரலில் பாடுகிறார். இந்திய இலக்கியத்தில் 'தலி்த்
இலக்கியம்' என்றொரு வகைமை முதன் முதலில்
உருவானதே மராத்திய சமூகத்திலிருந்துதான். பிறகுதான் அது மெல்ல மாநிலங்களுக்கும்
பரவ ஆரம்பித்தது. எனவே அவ்வாறான பின்புலத்திலிருந்து
உருவான ஒரு போராளியை சட்டவிதிகள்
கொண்டு முடக்கி விட முடியும்
என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறை நாராயணன் காம்ப்ளேவை மீண்டும் கைது செய்கிறது. மீண்டும்
அதே நீதிமன்ற சூழல். விசாரணை ஒத்தி
வைப்புகள். கோடை
விடுமுறைக்காக நீதிமன்றம் ஒரு மாதம் இயங்காது
என்பதை அறிந்தும் கூட பெரியவரின் வயதையும்
கருத்தில் கொள்ளாமல் நீதிபதி ஜாமீன் வழங்க
மறுக்கிறார். காவல்துறையினர் அந்தளவிற்கான கடுமையான சட்டப்பிரிவுகளில் குற்றத்தை பதிவு செய்திருக்கின்றனர்.
கோடை விடுமுறைக்காக கடைசி நாளின் நீதிமன்றம்
கலைந்து செல்வதும் அந்த அறையில் மெல்ல
இருள் பரவுவதுமான குறியீட்டுக் காட்சியுடன் படம் ஏறத்தாழ நிறைகிறது.
நீதிமன்றங்களுக்கு ஒருமாத கோடை விடுமுறை
அளிப்பது என்பது பிரிட்டிஷ் ஆட்சியில்
ஏற்படுத்தப்பட்ட நடைமுறை. அந்தச் சமயத்தில் இந்தியாவில்
வெயில் அதிகமாக இருக்கும் என்பதாலும்
நீதிபதிகள் இங்கிலாந்திற்கு சென்று தங்கள் குடும்பத்தினருடன்
நேரத்தைச் செலவழிப்பதற்காகவும் அந்த நீண்ட கால
விடுமுறை அப்போது ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சுதந்திர இந்தியாவில்
கோடிக்கணக்கிலான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் போது, அந்த வழக்குகளில்
குற்றஞ்சாட்ப்பட்டு விசாரணைக் கைதிகளாய் சிறையில் வாடும் அப்பாவிகளின் துயரங்களை
கணக்கில் கொள்ளாமல் நீதிபதிகள் உல்லாசப் பயணம் செல்லும் இந்த
பிரிட்டிஷ் கால நடைமுறை இன்னமும்
அப்படியே பின்பற்றப்பட வேண்டுமா என்கிற விமர்சனங்களும் எழுகின்றன.
இது குறித்த கருத்தை ஓய்வுபெற்ற
நீதிபதியான சந்துருவும் வெளியிட்டுள்ளார்.
இந்திய
நீதிமன்றங்கள் சமூகநல நோக்கில் சில அசாதரணமான
சமயங்களில் முக்கியத்துவம்
வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன். கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி சமூகத்தின் இதர நிறுவனங்கள் கைவிட்டாலும்
ஒரு சாதாரண நபரின் கடைசிப்
புகலிடம் நீதிமன்றம்தான் என்பதில் பொதுச்சமூகம் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.
விழுமியங்களை பின்பற்றுவற்கான சதவீதம் குறைந்து கொண்டே
வந்தாலும் சமூகத்தின் இன்னமும் பொதுவான
அறவுணர்வு மங்கிப் போகாமலிருக்கும் நம்பிக்கையின்
மீதுதான் இச்சமூகம் இயங்கி வருகிறது. நீதித்துறையைச்
சார்ந்த பல தனிநபர்கள் இந்த
நம்பிக்கையை அவர்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளின் மூலம் பலமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்
என்பது வரலாறு. என்றாலும் ஓட்டுமொத்த
நீதியமைப்பின் இயங்குமுறையில் உள்ள நடைமுறை மெத்தனங்களையும்
செல்வாக்குள்ளவர்கள் சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து எளிதாக தப்பிக்க இயலும்
அதே சமயத்தில் எளிய மக்களின் மீது
அது கடுமையாக கருணையின்றி பாயும் அவலங்களையும் நியாயமான
கருத்துரிமைக்கு ஆதரவாக அது சார்ந்த
செயற்பாட்டாளர்களை பிரத்யேக கவனத்துடன் நீதித்துறை அணுக வேண்டிய அவசியங்களையும்
பற்றி 'கோர்ட்' திரைப்படம் பிரச்சாரக் குரல் ஏதுமின்றி ஆனால்
அழுத்தமாக நிறுவும் வகையில் முக்கியமான கலை
ஆவணமாக மாறி நிற்கிறது.
இயக்குநர்
சைத்தன்ய தம்ஹனே இதற்கு முன்
சில ஆவணப்படங்களை இயக்கியிருந்தாலும் இதுவே அவரது இயக்கத்தில்
வந்த முழு நீள திரைப்படமாகும்.
தனது முதல் திரைப்படத்தையே மிக
அழுத்தமான தடமாக சமூகம் சார்ந்த
அக்கறையுடன் பதிவு செய்திருக்கும் வகையில்
அவரது பணி பாராட்டப்பட வேண்டியது.
நாராயண் காம்ப்ளேவாக நடித்திருக்கும் பெரியவர் Vira Sathidar முதற்கொண்டு அவர் தரப்பில் வாதாடும்
வழக்கறிஞராக நடித்திருக்கும் Vivek Gomber (இவர் படத்தின் தயாரிப்பாரும் கூட)
வரை அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். நாம்
பார்ப்பது ஒரு திரைப்படம் என்கிற
உணர்வே வராமல் ஒரு வழக்கின்
தொடர் விசாரணையைக் கவனிக்கும் விதத்திலான இயல்புத்தன்மையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் இது இந்தியாவின் சார்பில்
ஆஸ்கர் விருதிற்கு தேர்வு செய்யப்படும் தகுதியைப்
பெற்றுள்ளதோடு தேசிய விருது உள்ளிட்ட
பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
அம்ருதா
- நவம்பர் 2015-ல் வெளியான கட்டுரை
(நன்றி: அம்ருதா)
No comments:
Post a Comment