திருமணமான
புதிது எனக்கு அது! இயக்குநர்
சேரன் ஒருமுறை என்னை அழைத்து,
தன் காரிலே ஏற்றிக் கொண்டு
அவரே ஓட்டிச் சென்றார். கார்
நகரம் தாண்டி மாமல்லபுரத்தின்
கடற்கரையை நெருங்கியது.
ஸார்..
நீங்க கம்போசிங்கிற்காகக் கூட்டி வந்துட்டீங்க. ஆனா
நான் சாய்ந்திரம் கண்டிப்பா வீட்டுக்குப் போயிறணும். ஏன்னா.. வீட்டில் என் மனைவி மட்டும்தான்
இருக்காங்க. அப்பா அம்மா வெளியூர்
சென்றிருக்காங்க என்று சொல்ல, அவர்
ஆமோதித்து என்னை பரத்வாஜின் கம்போசிங்
அறைக்குள் அழைத்துச்
சென்றார். மாமல்லபுரத்தில் இருந்த ஒரு விடுதியிலே
கம்போசிங் ஆரம்பமானது.
இயக்குநர்
சேரன் அவர்கள் ஒரு வித்தியாசமான
பிடிவாதக்காரர். சட்டென உணர்ச்சிவசப்படக் கூடிய
அபூர்வமான கலைஞர். தமிழ்த்திரைப்படத்திற்குக்
கிடைத்த ஒரு பெரிய பொக்கிம்.
அதற்கு
முன்பு அவருடைய கூட்டணியிலே மூன்று
படங்களுக்கு எழுதியிருந்த காரணத்தால் அவருடைய குணம், பிடிவாதம்
என்ன என்பது எனக்கு நன்றாகத்
தெரியும்.
அவருடைய
ஒருபடத்திலே ஒரு பாடல் எழுதுவதென்பது
பத்து படத்திலே பாடல் எழுதுவதைப் போல
நேரத்தையும் உழைப்பையும் கேட்கக் கூடியது. அவ்வளவு
சீக்கிரத்திலே திருப்தி அடைய மாட்டார். அந்த
கதைக்குரிய சூழலை
என்னிடம் சொன்னார்.
ஒரு பெண் மிக சோகத்தில்
இருக்கின்றபோது, அவளைத் தேற்றி ஆறுதல்
அளிக்கக் கூடிய வகையிலே பக்கத்து
வீட்டிலே இருக்கின்ற ஓர்
இளைஞன் பாடுவதைப்போல ஒரு பாடல் என்று
சொல்லி அந்த சூழல் ஆரம்பமானது.
அதன்பிறகு
சிற்சில கதை மாற்றங்களுக்குப் பின்னால்
அந்த இளைஞன் பல தோல்விகாளால்
துவட்டி எடுக்கப்பட்டு வாழ்க்கையின்
உற்சாகமுனை முறிந்து உள்ளம் உடைந்து கிடைக்கையிலே அவனைத்
தேற்றுகின்ற ஒரு பாடலாக, கடற்கரை
ஓரத்திலே கண்பார்வை அற்றவர்களோடு சேர்ந்து ஒரு பெண்தோழி பாடுவதுபோல்
அந்தச் சூழல் விவரிக்கப்பட்டது.
அதன்பிறகு
அது மேலும் பொலிவூட்டப்பட்டு, ஒரு
அரங்கம்! அந்த அரங்கத்திலே பெரும்
இளைஞர் பட்டாளம். அவர்களிலே
மனம் முறிந்த நிலையிலே கதாநாயகன். மேடையிலே
பார்வையற்றவர்களின் இசைக்குழு.
அந்த இசைக்குழுவின் நடுநயமாக இதயத்தால் பேசும் ஒரு சிநேகிதி, தன்
வார்த்தைகளால் தன்னம்பிக்கையை டன் கணக்கிலே அள்ளி கேட்பவர்களின்
நெஞ்சத்திற்குத் தருகிறாள் என்று இறுதி வடிவம்
எடுத்தது.
எனக்கு
நன்றாக நினைவிருக்கிறது, சூழலைச் சொன்னவுடன் நானும்
இயக்குநர் சேரன் அவர்களும் ஒரு
கடைத் தெருவிலே நின்று இளநீர் சாப்பிட்டுக்
கொண்டிருந்தோம்.
இளநீர்
குடித்து முடித்ததும் அவர் என்னிடம் சொன்னார்.
இந்தப் பாடலுக்குத் தீவிரமாக நீங்கள் உழைத்து எழுதிவிட்டீர்கள்
என்றால் தேசிய விருது உறுதிஎன்றார்.
கிட்டத்தட்ட
அன்று மாலையே திரும்பி விடலாம்
என்று கூறிதான் என்னை அழைத்துச் சென்றார்.
இருந்தபோதிலும் இரண்டு நாட்கள் மாமல்லபுரத்தில்
இருந்து வெளிவர முடியவில்லை.
தேசியவிருது
என்கின்ற கனவு பாடல் எழுத
பேனா பிடித்த நாட்களில் இருந்தே
உள்ளுக்குள்ளே உருவாகி, உருவமடைந்து, உயரமான ஒரு குன்றாய்
என்னைக் கிழித்துக் கொண்டு வெளியேறிய கனவு.
சேரன் அவர்கள் எனக்குள் விதைத்த
அந்தப் பொறி, திரும்பவும் கம்போசிங்
அறைக்குள் வந்த போதெல்லாம் கனன்று
கொண்டிருந்தது.
இசையமைப்பாளர்
பரத்வாஜ் அவர்கள் அற்புதமானதொரு மெட்டினை
இசைத்துக் காட்ட, காலதாமதமே
இல்லாமல் அந்த நொடியிலே கிளர்ந்தெழுந்தது
சிந்தனை!
உடனடியாக
காகிதத்தில் பல்லவியின் மொத்த வரிகளையும் நானெழுதிக்
காட்ட, அதை பாடுவதற்குரிய டம்மி
வார்த்தைகளாய் எடுத்துக் கொண்டு பரத்வாஜ் அதைப்
பாடிக் காட்டினார்.
மெட்டும்
வரியும் கைகோர்த்துப் பின்னிப் பிணைந்திருந்தன கதையின் சூழலுக்கு ஏற்றவாறு. சேரனுக்குள்
மிகப்பெரிய மனமலர்ச்சி. தட்டிக்கொடுத்தவர்,
இன்னும் தன்னம்பிக்கையின் மகாமருந்தாக தொடர்ந்து சரணங்கள் இடம்பெற வேண்டுமென்றார்.
பாடலின் பல்லவி எழுதுவதற்கு ஒரு
சில கணங்களே ஆனது.
ஒவ்வொரு
பூக்களுமே சொல்கிறதே.. என்பதில் ஆரம்பித்து மனமே ஓ.. மனமே
நீ மாறிவிடு.. மலையோ அது பனியோ
நீ மோதிவிடு என்று எழுதி முடிக்க
ஓரிரு நிமிடங்கள்தான் ஆனது. ஆனால் அதற்குப்
பிறகு இரண்டு சரணங்கள் எழுதி
முடிப்பதற்கு ஆன நாட்கள் மட்டும்
கிட்டத்தட்ட நாற்பது
நாட்களுக்கு மேல் இருக்குமென நான்
நினைக்கிறேன்.
நாற்பது
நாட்களும் ஒரு ஐந்து சரணம்
தினசரி எழுதி எடுத்துக்கொண்டு செல்வது;
சேரன் அவர்களைச் சந்திப்பது; பாடிக்
காட்டுவது; விவாதிப்பது. சிற்சில நேரங்களில் அவர்
வரிகளை முற்றிலுமாக ஒதுக்கும்போது கோபப்படுவது; பதிலுக்கு அவரும் கோபப்படுவது என்று
உரசல்களும், நட்பு ரீதியான உரையாடல்களுமாய் சந்திப்புகள்
தொடர்ந்து கொண்டே இருந்தன, முடிவே
இல்லாமல்.
வெகுநீண்ட
உழைப்பிற்குப் பிறகு, கிட்டத்தட்ட முப்பது
நாற்பது சரணங்களின் வரிகளை எடுத்துக் கோர்த்து இரண்டு
சரணங்களாய் வடிவமைத்தோம்.
பாடல் வெளிவரும் வரை எனக்கு மிகப்பெரிய
அழுத்தமான எண்ணமில்லை, இப்பாடல் ஜனரஞ்சகமான வெற்றியைப் பெறும் என்பதில்.
ஏனெனில்
தேசிய விருதிற்காகக் குறிவைக்கப்பட்ட படைப்புகள் ஜனரஞ்ச வெற்றியைப் பெற்றதில்லை.
ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து
எறிந்தது அப்பாட்டு.
எத்திசை
திரும்பினாலும், நியூயார்க் மண்ணிலே நடக்கின்ற தமிழனில்
இருந்து பொம்மனம்
பாளையத்திலே புழுதி வண்டி ஓட்டிப்
போகின்ற மனிதன் வரைக்கும் ஒவ்வொரு பூக்களும் என்பது
தன்னம்பிக்கையின் தேசிய கீதமானது. திரைப்படப்
பாட்டுலகின் அறுபதாண்டுகால பாதையிலே ஒரு பல்கலைக் கழகத்திலே
பாடமாக்கப்பட்டப் பாடலாக இது உருமாறியது.
மலேசியாவில்
சீனர்களின் மாநாட்டிலே இப்பாடல் மொழி பெயர்க்கப்பெற்று பாடப்பட்டது. ஏராளமான
கல்வி நிறுவனங்களிலே தொழிற்சாலையிலே கடவுள் வாழ்த்தப் பாடலாக
இன்றும் ஒலிக்கிறது. அதையயல்லாம்
கடந்து எத்தனையோ பேருடைய தற்கொலை எண்ணத்தைத்
தடுத்து தன்னம்பிக்கையை விதைத்தது.
சில வருடங்கள் முன்பு, ஒரு நிகழ்ச்சிக்காக
திருச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு ஹோட்டலில்
சாப்பிடச் சென்று சாப்பிட்டுத் திரும்பிய
பொழுதில், உணவு பரிமாறும் பணியாள்,
விழியில் நீர் கசிய என்னை
எதிர்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள
முடிவெடுத்து விப்பாட்டிலை வாங்கினேன்.
அதற்கு
முன்பு ஆட்டோகிரோப் திரைப்படம் பார்க்க எண்ணினேன். திரைப்படம்
பார்த்தேன். அத்திரைப்படத்தில் வந்த ஒவ்வொரு பூக்களுமே
பாடலைக் கேட்டு என் முடிவை
மாற்றி, விப்பாட்டிலை தூக்கி
எறிந்த தன் நிஜத்தைச் சொன்னார்.
சமீபத்தில்
கூட, பத்தாம் வகுப்புத் தேர்வில்
முதலிடம் பெற்ற மாணவி, இந்தாண்டு மாநிலத்தில் முதலிடம் பெற்றதற்குக் காரணம் ஒவ்வொரு பூக்களுமே
என்கின்ற பாடலை அன்றாடம் கேட்டுக்
கேட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டதுதான் என்பது வரைக்கும் இந்தப்
பாடல் என்னுடைய பாட்டுலகப் பாதையில் இருபத்தி நான்கு மணிநேரச் சூரியனாய்
என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் பலபேர் கேட்பார்கள்.
இன்னொரு ஒவ்வொரு பூக்களுமே எப்போது
என்று. ஒவ்வொரு பூக்களுமே எழுத
வேண்டும் என்று முயற்சித்து அந்தப்
பாடலைச் செய்யவில்லை.
அதுபோல்
இன்னொரு ஒவ்வொரு பூக்களுமே பாடலை
எழுத முற்பட்டாலோ முயற்சித்தாலே அது
நடக்காத காரியம். அது தானாக, தனலாக,
தவமாக நிகழ்கின்ற ஒரு வைபோகம். அது எப்போது நிகழுமென்று
எவருக்கும் தெரியாது. நிகழும்
என்பது மாத்திரம் ஒரு நம்பிக்கை.
ஏனெனில்
நிகழ்த்துவது நான் என்கின்ற எண்ணம்
எப்போதும் எனக்கு இல்லை. ஏதோவொரு சக்தி நிகழ்த்துகிறது. அது
நிகழ்த்த வேண்டுமென்று முடிவெடுக்கிற போது அது நிகழும்
என்று மனதிற்கு மட்டுமல்ல பல மன்றங்களிலும் நான்
பேசியிருக்கிறேன்.
எப்படியாகினும்
அந்த உழைப்பிற்கு மகா அங்கீகாரமாய், இந்தியாவில்
இளம் வயது கவிஞனுக்குத்
தமிழர்களின் தலைப்பாகை கெளரவமாய் இருந்த முன்னாள் குடியரசுத்
தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தன் பொற்கரங்களால்
தேசிய விருதை எனக்கு வழங்கிய
போது இன்றைய
மணித்துளிகளிலும் ஆனந்தத்தின் நீர்ப்பெருக்கை இரண்டு
விழிகளிலும் விதைக்கிறது.
என் குடும்பத்தோடு, அரசாங்கத்தின் விருந்தினராய் டெல்லி சென்ற பொழுதுகள்,
அங்கே ஏராளமான தேசிய விருது
பெற்ற திரையுலக பிரமுகர்கள் மத்தியில் அவர்களின்
கைதட்டல்களோடு இணைந்து வாழ்த்துக்கள்
விஜய் என்ற ஒரு தமிழ்க்
குரலின் வாழ்த்தோடு ஜனாதிபதி அவர்கள் தேசிய விருதைத்
தந்த அந்தநொடி, என் வாழ்க்கையில் விலைமதிக்க
முடியாத கடவுளின் வரம். என் தாய்
தந்தையின் நம்பிக்கை அன்று நிஜமாகியது.
திரையுலகத்தை
நோக்கி அன்று நான் நடந்த
போது, என்னைச் சுற்றி நிகழ்ந்த
அவமானங்களுக்கு என் கவிதை கொடுத்த
பதில் அந்த தேசிய விருது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டவுடன் நான்
உடனே ஓடோடிச் சென்று சந்தித்தது
இயக்குநர் சேரனைத்தான்.
சேரனை சந்தித்ததும், என்னையும் அறியாமல் அவரை கட்டித்தழுவி கன்னத்திலே
ஒரு முத்தம் வைத்தேன். அந்த முத்தத்திலே இருவருக்குள்ளும்
பாடல் எழுதும் போது எழுந்த
விவாதங்களும் விரிந்த கோபங்களும் கரைந்து
போயின.
நட்பின்
ஈரப்பசை, பூவின் மகரந்தம் போல்
இதயத்தின் அடியில் காலத்தின் படிமமாய்
படியத் துவங்கிற்று.
இன்னொரு
ஒவ்வொரு பூக்களுமே எழுத வேண்டும்; எழுத
முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு பூக்களும் என்பதைவிட
ஒரு உயர்ந்த பாடலை எழுத
முடியுமா? என்கின்ற கேள்வி எனக்குள் ஒலிக்காத
நாட்களே இல்லை எனலாம்.
அவ்வளவு
வலிமையான ஒரு பாடலை என்
வாழ்க்கைக்குக் கொடுத்த ஒரு பிரம்மாண்டமான
வசந்தகாலத்தை என் திசைக்குத் திருப்பிவிட்ட
என் கோபக்கார இயக்குநர் சேரன் அவர்களுக்கு இந்தப்
பாடலை சமர்ப்பிக்கிறேன்.
- பா. விஜய்
No comments:
Post a Comment