கல்லீரல் காக்கும் பசலைக்கீரை




தமிழகத்தில் பசலைக்கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைப்பதால், அதற்குப் பருப்புக்கீரை என்றொரு பெயரும் உண்டு. இந்தக் கீரை நம் நாட்டில் பண்படுத்தப்பட்ட நிலங்களில் பரவலாகக் காணப்படும். கொடிப்பசலை, குத்துப்பசலை, வெள்ளைப்பசலை என, பசலைக்கீரையில் பல வகைகள் உள்ளன. நம் ஊரில் அதிகம் கிடைப்பது, குத்துப்பசலைதான்.
பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களும், சர்க்கரை நோயாளிகளும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், கடைசல் போல் செய்து சாப்பிடலாம்.
உணவில் பசலைக்கீரையை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
பசலைக்கீரையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கும்.
பசலைக்கீரையை மோருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலிமை அடையும். எனவே, சிறுவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம்.
உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் சூடு குறைந்து, குளுமை பெறும். குடல் நோய்கள் வராது.
பசலைக்கீரையின் தண்டுச்சாற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் ஜீரண சக்தி மேம்படும். சளி, நீர்க்கோவை போன்றவையும் சரியாகும்.
பசலைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்துவந்தால், ரத்தசோகை வராது. நரம்பு மண்டலங்கள் சீராக இயங்கும்.
சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களும் சப்பாத்திக்குப் பசலைக்கீரைக் கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
பசலை இலைச்சாறு எடுத்து, கால் முதல் அரை ஆழாக்கு வரை நாள்தோறும் காலையும் மாலையும் சாப்பிட்டுவந்தால் உடலில் ஏற்படும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, எரிச்சல், சீதபேதி, ரத்தபேதி முதலான நோய்கள் குணமாகும்.
உடலின் உள் வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலி நீங்க, பசலை இலையை நன்றாக அரைத்து, நெற்றியின் மீது பற்றுப் போடலாம். தலைவலி நீங்கும்.
அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், பசலை இலையை நன்றாக நசுக்கி அக்கியின் மீது தொடர்ந்து தடவிவந்தால், அக்கி குணமாகும்.
பசலை இலையையும் அதன் விதையையும் சேர்த்து நன்றாக அரைத்து, தீப்புண், வெந்நீரால் ஏற்பட்ட காயம், சொறி, சிரங்கு ஆகியவற்றின் மீது தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.

பசலைக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போடலாம்.

No comments:

Post a Comment