கிளிமாஞ்சாரோ - எந்திரன் பாடல்ப் பிறந்தக்கதை



பேரன்புமிக்க தமிழ்த் திரைப்பாடல் ரசிகர்களே!

உங்கள் இதயச் செவிமடல்களை வருடிய திருடிய பல்லாயிரம் பல்லாயிரம் பாடல்களின் கூட்டுக்குள் இருந்து, இதோ ஒரு பேனாக்குயில் தன் மனசில் படம்பிடித்து தான் மட்டுமே பார்த்துவந்த சில எழுத்து நிழற்படங்களை உங்கள் சங்கீத விழிகளுக்கு சமர்ப்பிக்கிறது.

இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் திரையில்..! முதல்வர் கலைஞரின் இளைஞன் எனும் திரைப்படத்தில்! படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது! சரி..!

இதுவரை பயணித்த என் திரைப்படப்பாடலின் நீளம் 14 ஆண்டுகள்! எழுதிய பாடல்களின் எண்ணிக்கை 2000ம் கடந்து!
அதில் மெல்லிய வரிகள் முதல் வல்லிய வரிகள் வரை ரசிக்கும் லட்சோபலட்சம் தமிழ் இதயங்களுள் குடிபுகுந்த பாடல்கள் மட்டும் நிச்சயம் சற்றேறக்குறைய 500க்கும் மேலானதாகவே இருக்கும்.

தமிழ்த்திரையில் உள்ள அனைத்து இயக்குநர்களுக்கும், இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் முதல் இன்றைய புத்தம் புதிய இயக்குநர் வரை, அதே வரிசையில் இசைஞானி இளையராஜா முதல் இன்றைய புதிய இசையமைப்பாளர்கள் என அனைவரது சேர்க்கையிலும் பவனி வந்துள்ளது என் பாட்டரங்கம்பத்துநிமிடத்திற்கு எனது ஒரு பாட்டு எந்த தமிழ்ச் செவியிலாவது இறங்கிக்கொண்டிருக்கும்.

இதுவரை எனது இலக்கியப் படைப்புகள் பாடல் தொகுதியையும் சேர்த்து 46! இதில் ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் 150க்கும் மேல்! முனைவர் பட்டம் பெற்றவர்கள் 16 பேர்! திரைப்படப்பாடல்களில் மட்டும் 17 பேர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திரைப்பாடல் சிகரத்தில், கவியரசர் கண்ணதாசன், காவியக்கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரின் பதிவுகளுக்குக் கீழே மிக ஆணித்தரமாக அழுந்தப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பெயர் தேசிய விருது என்ற பெயரால்!

திரைப்படப் பாடல்களுக்கு மட்டும் பெற்ற விருதுகள்ஃப்லிம் பேர் விருது, தமிழக அரசு விருது, கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது உட்பட 300க்கும் மேல்!

சரி.. ஏன் இந்த சுயபுராணம்..? காரணம் இருக்கிறது!

திரைப்படப்பாடல் பின்னணியில் இத்தனை ஆதர்சன வெளிச்சத்தில் பயணித்த நான் இப்போது ஏன் நடிக்க வந்தேன்..?

நிறைய பேருக்குள் நிழலாடும் வினா இது! என் வாசகர்களில் சிலர் அன்பாகவன்மையாக கண்டிப்பதுகூட உண்டு!

இதற்கான காரணத்தை இத்தொடரின் இறுதிவாரத்தில் சொல்லவிருக்கிறேன்.

உங்களுக்குக் கேட்கிறதா..?

கேட்காதுஆனால் எனக்குக் கேட்கிறது.

1995ல் கோவையிலிருந்து குலுங்கிக் கொண்டு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸின் சத்தம்!

ஒரு இராப்பொழுது! இரயிலடியில் ஏராளமான முகங்கள் பயணத்தின் பதைபதைப்பில் உறைந்துகொண்டிருக்க, அன்று அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்டின் ஜன்னல் அருகே ஒரு சிறைக்கைதியின் மனோநிலையில் விழிகளை திருதிருவென விழித்துக் கொண்டு ஒடிசலான தேகத்துடன் அமர்ந்திருக்கிறேன் நான்!

அப்போது 20 வயது!

வெளியே இரயிலைவிட அதிக எடையளவு தன்னம்பிக்கையை தன்வார்த்தையில் நனைத்து என்னுள் ஊற்றிக்கொண்டிருக்கிறார் என் தந்தை பாலகிருஷ்ணன். கனவுகள் உள்ளே ததும்பி வழிகிறது கண்ணீர் என்ற பெயரில் என் கண்களில் இருந்து.

இதுநாள் வரை ஒரு வீட்டுப்பறவையாக சுற்றிவந்த என் இளமைக்காலத்தின் மீது, காலம் தன் ராட்சஸ கால்களை வைத்து பிராண்டி விடுவதைப்போல் ஒரு உணர்வு.

கல்லூரி படிப்பை தொடர்வதைவிட, திரைப்பாடல் எழுதும் முயற்சியை மேற்கொள்வதே நலம் என்று நான் சொல்லவில்லை; சொன்னது என் தந்தை!

தமிழோடும் கவிதையோடும் இசையோடும் பின்னிப் பிணைந்த நாட்கள் கடந்து, என்னுள் பாடல் எழுதும் வேட்கை பிறந்து, அது கோவை வானொலி நிலையத்தில் வளர்ந்து, உள்ளே அக்னி கனலாய் கனல ஆரம்பித்தது.

இது உண்மை! நான் என் வீட்டாரை விட்டுப் பிரிந்து நீண்ட நாள், நீண்ட தொலைவு இருந்ததில்லை, அதுதான் வலி! அந்த கனம் என் இமைகளை அழுத்திக் கொண்டிருந்தது.

பச்சை விளக்கு ஒளிர்ந்தது இரயிலடியில்! உன் வாழ்க்கை விளக்கும்தான் என்றார் என் அப்பா! இரயில் நகர ஆரம்பித்தது; மனம் இரயிலைவிட கனத்தது.

அப்பாவை விட்டு நான் தூரம் தூரம் தூரம் விலகுகிறேன்இறங்கிவிடலாமா என்று இதயத்துள் போராட்டம். கண்கள் குளமாக அல்ல.. அணைக்கட்டாகவே மாறி உடைந்து ஊற்றிக் கொண்டிருந்தது.

வலிகள் வேறு வேறு நிறம் உடையவை. அவை வரும்போதுதான்; அனுபவிக்கப் படும்போதுதான் உணர முடியும். அந்த நொடியின்  ரணத்தை இந்த நொடியிலும் என்னால் உணர முடிகிறது. நிஜத்தின் பிடிமானமும் கற்பனையின் சிறகடிப்பும் சேர்ந்து கண்ணீரோடு என் உறக்கத்தையும் உலர்த்தி விட்டுக் கொண்டிருந்தது.

எத்தனையோ ஊர் கடந்து சென்னை என்ற பிரம்மாண்ட ஜனசங்கமத்திற்குள் இரயில் வந்து கிறீச்சிட்டது. காடு தொலைத்த பறவையாய் வெளியே வருகிறேன்புதிய சூழல்புதிய மனிதர்கள்புதிய உலகம், எல்லாம் புதிது!

பழையது எப்பவுமே பாதுகாப்பானது! புதியது முதலில் மிரட்டலைத்தான் மீட்டி வரும். புதியது பழையதாய் மாறும் வரை மனம் பழையதை பற்றிக் கொண்டே இருக்கும்.

சென்னை சென்ட்ரல் இரயில்நிலையத்தைவிட்டு வருகிறேன். அங்கிருந்து என் சித்தப்பா வீடு உள்ள சூளைமேடு பகுதிக்குச் செல்ல வேண்டும். எப்படிச் செல்வது..? பேருந்துகள் எல்லாம் பச்சைநிறத்தில்! நான் பார்க்காத பரபரப்பில்.

விசாரிப்புகளை முடித்து, உலர்ந்த உதடுகளோடு இரண்டு சுமை முடிச்சுகளோடு வெளியேறுகிறேன். பேருந்து நிலையத்தில் சூளைமேடு செல்ல காத்திருக்கிறேன்அங்கே ஒரு சுவரொட்டி என் கண்ணில் படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பாட்ஷா திரைப்படம்! பிரம்மாண்ட நட்சத்திரத்தின் படம்! அப்போது எனக்கான பேருந்தும் அங்கே வந்து நிற்கிறது. ஏறுகிறேன். ஜன்னல் வழியே சூப்பர் ஸ்டார் தெரிகிறார்.

எப்படியாது ஒருநாள் இந்த சூப்பர் ஸ்டாரே நம் வரிகளைப் பாடும் வகையில் எழுத்துக்களால் சாதித்துவிடவேண்டும் என்ற கனா என்னுள்! கனாவை கலைத்தது நடத்துநரின் குரல். அந்தக் கனாவை நிஜமாக்கியது ஒரு இயக்குநரின் குரல்.

இயக்குநர் ­ங்கரின் எந்திரனில்... இன்றைய இந்திய திரைவுலகமே அதிசயிக்கும் அந்த பிரம்மாண்டத்தின் பிரம்மாண்ட படைப்பில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, செல்ல வழி அறியாது நின்ற என் இதயத்தின் படைப்பு இன்றைய இளைஞர்களின் ரிங்டோனாய் கிளிமாஞ்சாரே!


இந்தப் பாடலை இயக்குநர் ­ங்கர் அவர்களுக்கும், இசைப்புயல் .ஆர்.ரகுமான் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.


 - பாவிஜய்



No comments:

Post a Comment